Wednesday, January 28, 2009

தானிய லட்டு

தேவையானவை:

புழுங்கலரிசி 2 கப்
கோதுமை மாவு 1 கப்
சோயா மாவு 2 டேபிள்ஸ்பூன்
கேழ்வரகு மாவு 1/2 கப்
வேர்கடலை 1 கப்
நெய் 1/4 கப்
முந்திரி 10
ஏலப்பொடி 1 டீஸ்பூன்
வெல்லம் 3 கப் (பொடித்தது)

செய்முறை:

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு புழுங்கலரிசியை சிவக்க வறுத்து மிக்சியில் மாவாக அரைத்துக்கொள்ளவும்.
சோயா,கோதுமை,கேழ்வரகு மாவுகளை தனித்தனியே வறுத்துக்கொள்ளவும்.
வேர்க்கடலையை வறுத்து தோலை நீக்கி பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் எல்லா மாவுகளையும் போட்டு நன்றாக கலக்கவும்.
முந்திரியை துண்டுகளாக்கி நெய்யில் வறுத்து சேர்க்கவும்.ஏலப்பொடி சேர்த்து நெய்யை உருக்கி சேர்த்து கலக்கவும்.

வெல்லத்தை நீர் விட்டு கரைத்து வடிகட்டி இளம் பாகானதும் (வெல்லம் நன்றாக கரைந்து சிறிது நேரம் கழித்து)
கலந்துவைத்துள்ள மாவில் கொட்டி கிளறி எடுத்து உருண்டைகளாக செய்கொள்ளவும்.
இந்த லட்டு புரோட்டின்,இரும்புசத்து ஆகிய சத்துக்கள் நிறைந்தது.

Wednesday, January 21, 2009

தந்தூரி ஆலு

தேவையானவை:

பொடி உருளைக்கிழங்கு 20
தயிர் 2 கப்
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
சீரக தூள் 1 டீஸ்பூன்
மிளகாய்தூள் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,வெண்ணைய் தேவையானது

செய்முறை:

தயிரை மெல்லிய துணியில் ஊற்றி இரண்டு மணிநேரம் கழித்து வடிகட்டி நன்றாக பேஸ்ட் போல் பிசைந்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கை ஆவியில் வேகவைத்து தோலை உரித்துவிட்டு எண்ணையில் பொரித்தெடுக்கவும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் வெண்ணையை உருக்கி இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கவும்.
பச்சை வாசனை போனவுடன் தனியா தூள்,சீரக தூள்,மிளகாய் தூள்,உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.அடுப்பை அணைத்துவிட்டு
தயிர் பேஸ்டை கலக்கவும். பொரித்த உருளைக்கிழங்குகளை இந்த தயிர் கலவையில் போட்டு பறிமாறவும்.

Tuesday, January 13, 2009

நூடுல்ஸ்

தேவையானவை:

கோதுமை மாவு 1 கப்
வெங்காயம் 1
தக்காளி 2
பட்டாணி 1/4 கப்
காரட் 2
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
மசாலா தூள் 1 டேபிள்ஸ்பூன்
புளி நெல்லிக்காய் அளவு
உப்பு,எண்ணைய் தேவையானது

தாளிக்க: கடுகு,உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை

செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கி பேஸ்ட் மாதிரி செய்துகொள்ளவும்.காரட்டை துருவிக்கொள்ளவும்.
புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு பேஸ்டு மாதிரி செய்துகொள்ளவும்.இதுதான் தக்காளி ப்யூரி.
----
கோதுமைமாவை கொஞ்சம் உப்பு போட்டு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.பிசைந்த மாவை முறுக்கு அச்சில் பிழிந்து இட்லிதட்டில் வைத்து 10 நிமிடம் வேகவைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து பின்னர் இஞ்சி பூண்டு விழுது,செய்துவைத்த வெங்காய பேஸ்டு,தக்காளி ப்யூரி மூன்றையும் போட்டு வதக்கவும்.
அதனுடன் பட்டாணி,துருவிய காரட்,மசாலா தூள்,உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.கடைசியில் வேகவைத்த நூடுல்ஸை போட்டு கிளறவும்.(ரொம்பவும் கிளறக்கூடாது,கொஞ்சம் பிரட்டினால் போதும்)

Monday, January 5, 2009

ஏழுகறி கூட்டு (திருவாதிரை கூட்டு)

இந்த ஏழுகறி கூட்டு திருவாதிரை அன்று களியுடன் சேர்த்து செய்யப்படுவது.

தேவையானவை:

பூசனிக்காய் ஒரு பத்தை
பரங்கிக்காய் ஒரு பத்தை
சர்க்கரை வள்ளிக்கிழங்கு 1
வாழைக்க்காய் 1
உருளைக்கிழங்கு 2
சேனைக்கிழங்கு (நறுக்கிய துண்டுகள்) 10
அவரைக்காய் 10

பச்சை மொச்சைப்பருப்பு 1/2 கப்
------
துவரம்பருப்பு 1 கப்
புளி பெரிய எலுமிச்சம்பழ அளவு
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
கொத்தமல்லி 1 கப் (ஆய்ந்தது)
-----
அரைக்க:

மிளகாய்வற்றல் 15
தனியா 1/4 கப்
கடலைபருப்பு 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் 2 கப்
பெருங்காயம் ஒரு துண்டு
------
தாளிக்க:
கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை எல்லாம் சிறிதளவு.

செய்முறை:

துவரம்பருப்பை குக்கரில் வைத்து நன்கு வேகவிடவும்.
அவரைக்காயை தவிர்த்து மற்ற காய்கறிகளை தோலை சீவிவிட்டு ஒரே அளவில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
அவரைக்காயை நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை எண்ணைய் விட்டு நன்றாக வறுத்து விழுதுபோல அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணைய் விட்டு தாளிக்கக்கொடுத்துள்ளவைகளை தாளித்து நறுக்கிய காய்கறிகளை மொச்சையுடன் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
தாராளமாக எண்ணைய் விட்டு வதக்கவும்.காய்கறிகள் நன்றாக வெந்தவுடன் புளியை கெட்டியாக கரைத்து விடவும்.நன்றாக கொதித்தவுடன் வேகவைத்த
பருப்பையும்,அரைத்த விழுதையும் உப்புடன் சேர்க்கவும்.நன்றாக கொதி வந்தவுடன் இறக்கவும்.கடைசியில் கொத்தமல்லி சேர்க்கவும்.

Sunday, January 4, 2009

திருவாதிரை களி

ஆருத்ரா தரிசனம் 10-01-09 அன்று வருகிறது.அன்று செய்யப்படுவது இது.

தேவையானவை:

பச்சரிசி 2 கப்
பயத்தம்பருப்பு ஒரு பிடி
கடலைபருப்பு 1/2 கப்
தண்ணீர் 6 கப்

வெல்லம் பொடித்தது 2 1/2 கப்
துருவிய தேங்காய் 1 கப்
முந்திரிபருப்பு 10
நெய் 1/4 கப்
ஏலக்காய் 5

செய்முறை:

பச்சரிசி,பருப்புகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக எண்ணய் விடாமல் சிவக்க வறுத்து மிக்ஸீயில் மூன்றையும் சேர்த்து கரகரப்பாக பொடி ரவையாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 6 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சிறிது கொதித்தவுடன் பொடித்த வெல்லத்தைப்போடவேண்டும்.வெல்லம் கரைந்தவுடன்
தேங்காய் துருவலை அப்படியே பச்சையாகப்போட்டு அதனுடன் இரண்டு ஸ்பூன் நெய் விடவேண்டும்.தள தள என்று கொதித்தவுடன் அடுப்பை slim ல் வைத்து அரைத்துவைத்த அரிசி பருப்புரவையை தூவிக்கொண்டே கிளறவும்.பின்னர் மூடிவைத்து அடிக்கடி அடிபிடிக்காமல் கிளறவும். நன்றாக வெந்தவுடன் முந்திரிபருப்பை வறுத்துப்போட்டு மீதமுள்ள நெய்யையும் விட்டு ஏலக்காய் பொடியைியும் போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

இறக்கிய பின் விட்டு விட்டு இரண்டு தடவை கிளறினால் "பொல பொல" என்று உதிர்ந்து வரும்.

அன்று, இதனுடன் குறைந்தது 7 காய்கள் போட்டு கூட்டு செய்வதுண்டு.

Friday, January 2, 2009

பலாக்கொட்டை பகோடா

தேவையானவை:

பலாக்கொட்டை 20
வெங்காயம் 3
பச்சைமிளகாய் 6
பூண்டூ 4 பல்
நெய் ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:

பலாக்கொட்டைகளை நன்றாகக்கழுவி குக்கரில் போட்டு வேகவைக்கவேண்டும்.நன்றாக வெந்தவுடன் தோலை உரித்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,பூண்டு,தேவையான உப்பு எல்லாவற்றையும் மிக்ஸீயில் போட்டு வடைக்கு அரைப்பதுபோல கெட்டியாக அரைக்கவேண்டும்.அத்துடன் நெய் ,கறிவெப்பிலைசேர்த்து வாணலியில் எண்ணைய் வைத்து காய்ந்த பிறகு சாதாரண பக்கோடாவிற்கு போடுவதுபோல் உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக வந்தவுடன் எடுக்கவேண்டும்

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...