Monday, December 26, 2011

இட்லி கார கறி




தேவையானவை:

இட்லி துண்டுகள் 20
எண்ணைய்  தேவையானது
---------
அரைக்க:
தேங்காய் துருவல் 1கப்
தனியா 1 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 3
---------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை  சிறிதளவு
----------
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ளவைகளை வறுத்து சிறிது  தண்ணீர் விட்டு விழுதுபோல அரைத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட தட்டை எடுத்துக்கொண்டு அதில் இட்லி துண்டுகள்,அரைத்த விழுது,சிறிது எண்ணைய் மூன்றையும் சேர்த்து நன்கு பிசிறவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பிசறி வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்த்து பிரட்டவும்.
சிறிது எண்ணெய் சேர்த்து பொன்னிறமாக வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

சாதாரண இட்லி சாப்பிடுவதை விட இதை ஒரு ஸ்நாக்காக நினைத்து குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Thursday, December 22, 2011

கல்கியில் என் சமையல் குறிப்பு




கல்கியில் வெளியான "பாரம்பரிய சமையல்" மெகா போட்டியில் எனது "குடலை இட்லி " என்ற சமையல் குறிப்பு

தேர்ந்தெடுக்க பட்டுள்ளது என்பதை மகிழச்சியுடன் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி.

Sunday, December 18, 2011

வடைகள்......பலவிதம்

                    மசால் வடை


1.உளுந்து வடை
தேவையானவை:
உளுத்தம்பருப்பு 1 கப்
இஞ்சி  1 துண்டு
பச்சைமிளகாய் 2
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2  தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
உப்பு,எண்ணய் தேவையானது
-----
செய்முறை:
உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி நைசாக அரைக்கவும்.இத்துடன் மிளகு,சீரகம் இரண்டையும் பொடித்து போடவும்.இஞ்சி,பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிப் போடவும்.தேவையான உப்பு,பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கலக்கவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து காய்ந்ததும் மாவை வடை மாதிரி தட்டி நடுவில் ஓட்டையிட்டு எண்ணையில் போட்டு இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
-------------------------------------------
2. தயிர் வடை

தேவையானவை:
உளுந்து வடை 10
கெட்டி தயிர் 2 கப்
பச்சைமிளகாய் 4
சின்னவெங்காயம் 6
இஞ்சி 1 துண்டு
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை  சிறிதளவு
கொத்தமல்லித்தழை   சிறிதளவு
உப்பு,எண்ணைய் தேவையானது
----
செய்முறை:
தயிரை உப்பு சேர்த்து கடைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்,வெங்காயம்,இஞ்சி மூன்றையும் வதக்கி தயிரில் சேர்க்கவும்.
பின்னர் ரெடியாக உள்ள உளுந்து வடைகளை சேர்த்து ஊறவைக்கவும்.
-------------------------------------------
3.அரிசி துவரம் வடை

தேவையானவை:
புழுங்கலரிசி 1 கப்
துவரம்பருப்பு 1/4 கப்
வெங்காயம் 1
தனியா 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
இஞ்சி 1 துண்டு
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணைய்   தேவையானது
-------
செய்முறை:
அரிசி பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
பின்னர் வடிகட்டி இதனுடன் தனியா,மிளகாய் வற்றல்,இஞ்சி தேவையான உப்புசேர்த்து ரவை பதத்துக்கு அரைத்து கடைசியில் வெங்காயத்தை சேர்த்து ஒரு சுற்று சுற்றி கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை சேர்த்து வடை தட்ட வேண்டும்.
---------------------------------------------
4.ஆம வடை

தேவையானவை:
கடலைப்பருப்பு1 கப்
சோம்பு 1 தேக்கரண்டி
வெங்காயம் 1
பச்சைமிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை  சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
------
செய்முறை:
கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.பின்னர் வடிகட்டி அதனுடன் சோம்பு சேர்த்து கெட்டியாக தண்ணீர் தெளித்து அரைக்கவேண்டும்.
அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி,கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை எல்லாம் சேர்த்து வடை தட்டவேண்டும்.
-------------------------------------------------
5. மசால் வடை

தேவையானவை:
கடலைப்பருப்பு 1 கப்
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
பச்சரிசி 1 மேசைக்கரண்டி
சீரகம் அல்லது சோம்பு 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 5
மிளகாய் வற்றல் 3
பெருங்காயம் 1 துண்டு
கறிவேப்பிலைசிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-----------
செய்முறை:
கடலைப் பருப்பு,உளுத்தம்பருப்பு,பச்சரிசி மூன்றையும் ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்
வடிகட்டி இதனுடன் மிளகாய் வற்றல்.பெருங்காயம் சேர்த்து அரைக்கவேண்டும்.
அரைத்த மாவில் தேவையான உப்பு,நறுக்கிய வெங்காயம்,சோம்பு,கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து வடைகளாக தட்ட வேண்டும்.
--------------------------------------------------
6. தேங்காய் வடை

தேவையானவை:
புழுங்கலரிசி 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,பாசிப்பருப்பு ஒவ்வொன்றும் 2 மேசைக்கரண்டிகள்
பச்சைமிளகாய்2
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
செய்முறை:
அரிசி,உளுத்தம்பருப்பை தனியாக ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
கடலை பருப்பு,பாசிப்பருப்பு இரண்டையும் தனியாக ஊறவைக்கவேண்டும்.
------
அரிசி,உளுத்தம்பருப்புடன் தேங்காய் துருவல்,பச்சைமிளகாய் உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
அதனுடன் பாசிபருப்பு,கடலைபருப்பு இரண்டையும்சேர்த்து ஒரு சுற்று சுற்றவேண்டும்.
அரைத்த மாவில் கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை சேர்த்து உளுந்து வடை மாதிரி நடுவில் ஓட்டையிட்டு எண்ணையில் போட்டு எடுக்கவேண்டும்.
------------------------------------------------------------
7. வாழைத்தண்டு வடை

தேவையானவை:
வாழைத்தண்டு 1
பச்சைமிளகாய்3
பொட்டுக்கடலை மாவு 1 மேசைக்கரண்டி
வெங்காயம் 1
கொத்தமல்லித்தழை சிறிதளவு
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
----------
செய்முறை:
வாழைத்தண்டை பொடியாக நறுக்கி மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவேண்டும்.
ஆறினவுடன் மிக்சியில் கரகரவென்று அரைக்கவும்.
அதனுடன் நறுக்கிய பச்சைமிளகாய்,வெங்காயம் பொட்டுக்கடலை மாவு,,கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து நன்றாக பிசறி சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவேண்டும்..
----------------------------------------
8. பொட்டுக்கடலை வடை

தேவையானவை:
பொட்டுக்கடலை 1 கப்
நிலக்கடலை 1/2 கப்
மிளகுத்தூள் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
------
செய்முறை:
பொட்டுக்கடலையையும்,நிலக்கடலையையும் லேசாக வறுத்து கரகரவென்று பொடித்துக்கொள்ளவும்.
அதில் மிளகுத்தூள்,உப்பு,கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து வடைகளாக தட்டவும்.
---------------------------------------------
9.முட்டைக்கோஸ் வடை

தேவையானவை:
துருவிய முட்டைக்கோஸ் 2 கப்
பயத்தம்பருப்பு 1 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
வெங்காயம் 1
சீரகம் 1தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
--------
செய்முறை:
பயத்தம்பருப்பையும் கடலைப்பருப்பையும் தனித்தனியாக ஊறவைக்கவேண்டும்.
பயத்தம்பருப்பை மிருதுவாகவும் கடலைபருப்பை கரகரவென்றும் அரைக்கவேண்டும்.
முட்டைக்கோஸுடன் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து ஊறவைக்கவேண்டும்.
--------
ஒரு பாத்திரத்தில் அரைத்த இரண்டு மாவையும் சேர்த்து அதில் முட்டைக்கோஸை வடித்து சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கிய் வெங்காயம்,பச்சைமிளகாய்,சீரகம்,கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை,சிறிது உப்பு பிசைந்து (தண்ணீர் விட வேண்டாம்) வடைகளாக தட்டவும்.
முட்டைக்கோஸுக்கு பதிலாக எந்த வகைக் கீரையையும்  சேர்க்கலாம், கீரையை பொடியாக நறுக்கி சேர்த்தால் போதும்.
---------------------------------------------------
10.ஜவ்வரிசி வடை

தேவையானவை:
ஜவ்வரிசி 3/4 கப்
கடலைப்பருப்பு 1 கப்
உருளைக்கிழங்கு 2
வெங்காயம் 1
சோம்பு 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
செய்முறை:
ஜவ்வரிசியையும் கடலைப்பருப்பையும் தனித்தனியே  அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
உருளைக்கிழங்கை தோலுரித்து வேகவைத்து மசித்து வைக்கவேண்டும்.
கடலைப்பருப்பை வடிகட்டி அதனுடன் சோம்பு,உப்பு சேர்த்து அரைக்கவேண்டும்.
அரைத்த மாவில் மசித்த உருளைக்கிழங்கு,வடிகட்டிய ஜவ்வரிசி,நறுக்கிய வெங்காய்ம்,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை எல்லாம் நன்கு கலந்து வடைகளாக தட்டவேண்டும்

Thursday, December 15, 2011

பைன் ஆப்பிள் ரசம்



தேவையானவை:                  பைன் ஆப்பிள்
பைன் ஆப்பிள் 2 பத்தை
துவரம்பருப்பு 1/2 கப்
புளி எலுமிச்சை அளவு
பெருங்காயம் ஒரு துண்டு
உப்பு தேவையானது

அரைக்க:
வற்றல் மிளகாய் 3
தனியா 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
துவரம்பருப்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்

தாளிக்க:
கடுகு,கறிவேப்பிலை,நெய்

செய்முறை:


அரை கப் துவரம்பருப்பை குக்கரில் ஒரு கப் தண்ணீரில் வைத்து மூன்று விசில் வந்தவுடன் இறக்கிவைக்கவும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி அதில் பெருங்காயம்,உப்பு போட்டு கொதிக்கவைக்கவும்.
வற்றல் மிளகாய்,தனியா,மிளகு,கடலைபருப்பு,துவரம்பருப்பு இவற்றை சிறிது எண்ணைய் விட்டு வறுத்து
அரைத்து கடைசியில் சீரகத்தை பச்சையாக வைத்து விழுதுபோல அரைத்து வைக்கவும்.
புளிஜலம் நன்றாக கொதித்தவுடன் அரைத்த விழுதைப்போட்டு சிறிது கொதித்த பின் வேகவைத்த பருப்பைப்போட்டு
கொதிக்கவைக்கவும்.
நன்றாக கொதி வந்தவுடன் pineapple
பத்தையை தோலை எடுத்துவிட்டு mixyல் நன்றாக சிறிது தண்ணீர் விட்டு அரைத்து
வடிகட்டி விடவும்.ஒரு நிமிடம் கழித்து இறக்கவும்.(பைன் ஆப்பிள் சாற்றை விட்டவுடன் ரசம் கொதிக்கவேண்டாம்.)
கடைசியில் வாணலியில் நெய் வைத்து கடுகு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
இந்த ரசத்திற்கு தக்காளி சேர்ப்பதில்லை

Sunday, December 11, 2011

வற்றல்....காரக்குழம்பு




தேவையானவை:
சின்ன வெங்காயம் 10
பூண்டு 5 பல்
சாம்பார் பொடி 1 மேசைக்கரண்டி
புளி 1 எலுமிச்சை அளவு
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு,நல்லெண்ணைய் தேவையானது
------
அரைக்க:
சின்ன வெங்காயம்  5
பூண்டு 3 பல்
தக்காளி 1
சுண்டைக்காய் வற்றல் 5
தேங்காய்             1 துண்டு
-------
பொரிக்க:
மணத்தக்காளி வற்றல் 1 மேசைக்கரண்டி
சுண்டைக்காய் வற்றல் 10
மிதுக்க வற்றல் 10
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
வெந்தயம்  1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் சின்ன வெங்காயம்,பூண்டு,தக்காளி மூன்றையும் எண்ணையில் வதக்கவேண்டும்.
சுண்டைக்காய் வற்றலை எண்ணையில் பொரித்தெடுத்து தேங்காய் துண்டுடன் எல்லாவற்றையும் சேர்த்து விழுது போல அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
-----
அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணைய் சேர்த்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து சின்ன வெங்காயம் பூண்டு இரண்டையும் வதக்கவேண்டும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து சாம்பார் பொடி,பெருங்காயத்தூள்,உப்பு சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
பின்னர் அரைத்த விழுதினை சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
பொரிக்க கொடுத்துள்ள வற்றல்களை எண்ணையில் பொரித்து சேர்க்கவேண்டும்.
(வற்றல்களில் ஏற்கனவே உப்பு இருப்பதால் அரை உப்பு போட்டால் போதும்)
இந்த வற்றல்..காரக்குழம்பு மற்ற வத்தக்குழம்பு /காரக்குழம்பை விட சுவை கூடுதலாக இருக்கும்.
சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.தயிர் சாதத்திற்கும் ஏற்றது.

Wednesday, December 7, 2011

அப்பம் (மூன்று வகை)




அப்பம் 1

தேவையானவை:
பச்சரிசி 1 கப்
வெல்லம் 1/2 கப் (பொடித்தது)\
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
வாழைப்பழம் 1
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி

செய்முறை:
அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
பின்னர் நைசாக அரைக்கவேண்டும்.
அதனுடன் பொடித்த வெல்லத்தையும் வாழைப்பழத்தையும் சேர்த்து அரைக்கவேண்டும்.
இட்லி மாவு பதம் இருக்கவேண்டும். அதனுடன் ஏலக்காய் தூள் சேர்க்கவேண்டும்.
வாணலியில் எண்ணைய் வைத்து நன்கு காய்ந்ததும் அடுப்பை ஸ்லிம்மில் வைத்து ஒரு கரண்டியில் மாவை எடுத்து  ஊற்றி
இருபக்கமும் பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.
---------------------
அப்பம்  2.

தேவையானவை:
மைதா மாவு 1கப்
அரிசிமாவு 1 மேசைக்கரண்டி
வெல்லம் 3/4 கப் (பொடித்தது)
வாழைப்பழம்1
ஏலக்காய் தூள்  1 தேக்கரண்டி

செய்முறை:
வெல்லத்தை ஒரு கரண்டி தண்ணீரில் பத்து நிமிடங்கள் வைக்க கரைந்துவிடும்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மைதாமாவு,அரிசிமாவு,வாழைப்பழம்,ஏலக்காய் தூள் சேர்த்து
தண்ணீர் விடாமல் பிசைய வேண்டும்.
கரைத்த வெல்லத்தை இதனுடன் சேர்த்து பிசைய வேண்டும்.கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மாவு இட்லி மாவு பதம் இருக்கவேண்டும்.
முதல் வகையில் கூறியபடி எண்ணெயில் மாவை ஊற்றி எடுக்கவேண்டும்.

-----------------------------
அப்பம் 3
தேவையானவை:
கோதுமைமாவு 1 கப்
அரிசிமாவு 1 மேசைக்கரண்டி
வெல்லம் 3/4 கப் (பொடித்தது)
வாழைப்பழம்1
ஏலக்காய் தூள்  1 தேக்கரண்டி

செய்முறை:
அப்பம் 2 ல் கூறியபடி மாவை கலந்து (மைதா மாவுக்கு பதில் கோதுமை மாவு) எண்ணெயில் ஊற்றி எடுக்கவேண்டும்.

Monday, December 5, 2011

பட்டர் குல்சா





தேவையானவை:
மைதாமாவு 2 கப்
dry yeast 1 டீஸ்பூன்
சர்க்கரை 1 டீஸ்பூன்
வெண்ணைய் 1/4 கப்
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சிறிது வென்னீர் எடுத்துக்கொண்டு அதில் dry yeast யும் சர்க்கரையையும் சேர்த்து கலக்கவேண்டும்.
பத்து நிமிடம் தனியே வைக்கவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தில் மைதாமாவு,உப்பு.yeast கலவை மூன்றையும் சேர்த்து கை விரல்களால் கிளறி வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து
மாவை தளர பிசைய வேண்டும்.ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணைய் சேர்த்து பிசைந்து இரண்டு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.

பிசைந்த மாவை உருண்டைகளாக்கி சற்று கனமாக இடவேண்டும்.பின்னர் ஒவ்வொன்றாக தவாவில் போட்டு மூடவேண்டும்.
இரண்டு நிமிடம் கழித்து மேலே உப்பி வரும்.வெளியே எடுத்து இருபுறமும் வெண்ணைய் தடவவேண்டும்.

இதற்கு side dish Peas Masala,ஆலூ மட்டர்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...