Monday, December 28, 2015

கீரை கடைசல்



தேவையானவை:

முளைக்கீரை 1/2 கப் (அரிந்தது)
அரைக்கீரை 1/2 கப் (அரிந்தது)
தக்காளி 2
வெங்காயம் 3
பூண்டு 5 பல்
தேங்காய் பால் 1/2 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது
---------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:
தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
முளைக்கீரை,அரைக்கீரை,வெங்காயம் (2),தக்காளி எல்லாவற்றையும் நன்றாக வதக்கி அரைக்கவும்.
வாணலியை எடுத்துக்கொண்டு அதில்; சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம் (1) பூண்டு இரண்டையும் நன்றாக வதக்கவும்.பின்னர்  அரைத்த விழுதை தேவையான உப்புடன் சேர்க்கவும். சிறிது கொதித்தவுடன் தேங்காய் பால் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

Monday, December 21, 2015

தேனும் தினைமாவும்


தேவையானவை:
தினை 1 கப்
துருவிய வெல்லம் 1/2 கப்
ஏலக்காய்தூள் 1 தேக்கரண்டி
தேன் 2 தேக்கரண்டி
நெய் 2 மேசைக்கரண்டி
------
செய்முறை:

தினையை லேசாக நீர் தெளித்து பிசிறி வைக்கவும்.
அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து பொடிக்கவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் பொடித்த தினையுடன் பொடித்த வெல்லம்,தேன் சேர்த்து பிசையவும்.
தினை மாவுடன் நெய் சேர்த்து உருண்டைகளாக பிடித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
-------
தேனும் தினையும் மிகுந்த சத்துள்ள உணவு.
சுவையும் நன்றாக இருக்கும்.
தேனும் தினையும் இதிகாச காலங்களிலிருந்து சிறப்பு மிகுந்த உணவாக சொல்லப்படுகிறது

Wednesday, December 16, 2015

EASY ரசம்




தேவையானவை:

துவரம்பருப்பு 1/4 கப்
தக்காளி 2
பச்சைமிளகாய் 2
மஞ்சள்தூள்1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
ரசபொடி 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு
நெய் 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
----

செய்முறை:

குக்கரில் வைக்கக்கூடிய ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு கப் தண்ணீருடன் துவரம்பருப்பு,பொடியாக நறுக்கிய தக்காளி,பச்சைமிளகாய்,மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள்.ரசப்பொடிஉப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கி குக்கரில் வைத்து 4 விசில் கழித்து அடுப்பை அணைக்கவும்
. குக்கரில் இருந்து எடுத்து மேலும் அரை கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
நெய்யில் தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.
கொத்தமல்லித்தழையை தூவவும்.

சுவையான எளிய ரசம் ரெடி.

Wednesday, December 9, 2015

குதிரைவாலி உப்புமா



தேவையானவை:

 குதிரைவாலி 2 கப்

பீன்ஸ் 10

காரட் 2

பட்டாணி 1/2 கப்

தக்காளி 2

வெங்காயம் 2
தண்ணீர் 4 கப்
நெய் 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு

எலுமிச்சம்பழ சாறு 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது
---------

தனியா தூள் 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் 1 டீஸ்பூன்

வெள்ளை எள் 1 டீஸ்பூன்

நிலக்கடலை 10

-----

செய்முறை:
குதிரைவாலியை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி,பீன்ஸ்,காரட் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தில் எண்ணைய் விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

பின்னர் பீன்ஸ்,காரட்,பட்டாணி, எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.

காய்கறிகள் நன்றாக வெந்ததும் உப்பு சேர்க்கவும்.

அதனுடன் 4 கப்,தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

வறுத்து வைத்துள்ள  குதிரைவாலியை சிறிது சிறிதாக போட்டு  கிளறவும்.
அடுப்பை ஸிம்மில் வைத்து கிளறவும்.வேகுவதற்கு 10 நிமிடம் ஆகும்.

தனியா தூள்,மிளகாய் தூள் சேர்க்கவும்.

இறக்கிய பின் வெள்ளை எள்,நிலக்கடலை இரண்டையும் வறுத்து பொடி பண்ணி தூவவும்.

கடைசியில் எலுமிச்சம்பழ சாற்றினை சேர்க்கவும்.

Monday, November 30, 2015

கார்ன் சாட்



தேவையானவை:

பேபி கார்ன் 5
வெங்காயம் 1
தக்காளி 2
பச்சைமிளகாய் 2
துருவிய காரட் 1/4 கப்
எலுமிச்சம்பழம் 1
கொத்தமல்லித்தழை 1/4 கப்
மிளகுத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு சிறிதளவு
சர்க்கரை 1 தேக்கரண்டி
-------
செய்முறை:

பேபி கார்ன் ஐ Microwave 'H" ல் 5 நிமிடம் வைக்கவும்.பின்ன்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பேபி கார்ன் துண்டுகள்பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி, பச்சைமிளகாய், துருவிய காரட், பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை,மிளகுத்தூள்
தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
அரைமணி நேரம் ஊறிய பின் சர்க்கரை சேர்த்து எலுமிச்சம்பழம் பிழியவும்.

Wednesday, November 25, 2015

அகலா அகல் விளக்குகள்










இன்றும்

கண்களை விட்டு

அகலா விளக்குகள்....

கண்கள்

அகலாய் அகல

அலகிலா விளையாட்டுடையார்

அருள் வேண்டி

அன்னை

வரிசையாய் வைத்த

அகல் விளக்குகள்



Monday, November 23, 2015

அப்பம்



தேவையானவை:

பச்சைசி மாவு 2 கப்
தேங்காய் 1/2 கப் (துண்டுகள்)
பொடித்த வெல்லம் 3/4 கப்
ஏலக்காய் 5
மஞ்சள் வாழைப்பழம் 1
எண்ணெய் தேவையானது
---------

செய்முறை:

ஏலக்காயை தூளாக்கிக்கொள்ளவும்.
தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
வாழைப்பழத்தை மிக்சியில் போட்டு அடித்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் பச்சரிசி மாவையும் பொடித்த ஏலக்காயையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
தூள் செய்த வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வெல்லம் கரையும் வரை கிளறி இறக்கவும்.

ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கலந்து வைத்த அரிசி மாவு,கய்ச்சிய வெல்லம்,வாழைப்பழ விழுது தேங்காய் துண்டுகள் எல்லாவற்றையும் சேர்த்து இட்லி மாவு பதம் வரும் வரை கிளறவும்.
குழிப்பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் ஊற்றி மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும்.இரண்டு பக்கமும் பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.

Tuesday, November 17, 2015

வெஜ் கம்புமாவு ஊத்தப்பம்



தேவையானவை

 கம்பு மாவு -1கப்
இட்லிமாவு -1/4கப்
சின்னவெங்காயம் -5
கேரட்துருவல் -1/4கப்
பச்சைமிளகாய் -1
இஞ்சி -சிறுதுண்டு
கறிவேப்பிலை -சிறிது
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் தேவையானது
----------

செய்முறை

வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை,இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்..
ஒரு பாத்திரத்தில் ராகிமாவு,இட்லிமாவு,சிறிது உப்பு போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதம் கரைத்துக்கொள்ளவும்..
அத்துடன் நறுக்கியவற்றை போட்டு கேரட்துருவலையும் போட்டு நன்கு கலக்கவும்.

 தோசைக்கல்லை அடுப்பில்வைத்து காய்ந்தவுடன் ஒருகரண்டி மாவு ஊற்றி  1ஸ்பூன் எண்ணை சுற்றி ஊற்றவும்.
மூடிவைத்து வேகவிடவும்.அடுப்பை சிம்மில்வைக்கவும்.
சிறிது வெந்தவுடன் திருப்பிபோட்டு இருபக்கமும் வெந்தவுடன் எடுக்கவும்.
சுவையான வெஜ் கம்புமாவு ஊத்தப்பம் ரெடி..


Saturday, November 7, 2015

முந்திரி கேக்





தேவையானவை:

முந்திரிப் பருப்பு -  2 கப்
சர்க்கரை -  2 கப்
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்

நெய் - 50 கிராம்

செய்முறை:


முந்திரிப் பருப்பை வாணலியில் நெய் விட்டு, நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். சற்று ஆறியதும் மிக்ஸியில் சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும்
 அடுப்பில் வாணலியை வைத்து சர்க்கரை, ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
பதம் சரியாக வந்தவுடன் அரைத்த முந்திரியை சிறிது சிறிதாக கொட்டி கிளற வேண்டும்.  சிறிது  நெய் சேர்த்து கை விடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.·   கெட்டியாக இருக்கும் பொழுது எடுத்து, நெய் தடவிய தட்டில் கொட்டி  ஆறியதும் வில்லைகளாக  போடவும்.

Monday, November 2, 2015

முடக்கத்தான் கீரை துவையல்





தேவையானவை:                        

முடக்கத்தான் கீரை  

முடக்கத்தான் கீரை 1 கப் (அரிந்து நறுக்கியது)
வெங்காயம் 1
தேங்காய் துருவல் 1/2 கப்
மிளகாய்  வற்றல் 3
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
புளி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------------------
செய்முறை:
முடக்கத்தான் கீரையை நன்றாக அலசிவிட்டு சிறிது எண்ணெய்யில் வதக்கிக்கொள்ளவும்.
வெங்காயதை பொடியாக நறுக்கி எண்ணெய்யில் பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும்.
மிளகாய்வற்றல்,பெருங்காயம்,உளுத்தம்பருப்பு,புளி நான்கினையும் சிறிது எண்ணெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
-----
வதக்கிய முடக்கத்தான் கீரை,வெங்காயம் வறுத்த தேங்காய் துருவல் ,வறுத்த மிளகாய் வற்றல்,பெருங்காயம்,உளுத்தம்பருப்பு எல்லாவற்றையும் தேவையான் உப்புடன்சேர்த்து அரைக்கவும்.
-------
முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு சிறந்த மருந்து

Monday, October 26, 2015

.வரகு போண்டா







தேவையானவை:
வரகு அரிசி மாவு - 3 கப்
கடலை மாவு - 2 கப்
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி,
சின்னவெங்காயம் - 10
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி,
சீரகத்தூள் - சிறிதளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கொத்தமல்லி - சிறிதளவு
,பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
 உப்பு - தேவையான அளவு,
 எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை:



ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்
 எண்ணெய் தவிர்த்து அனைத்து பொருட்களையும் ஓன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து போண்டா மாவுப் பதத்துக்கு கட்டி தட்டாமல் பிசைந்துக் கொள்ளவும்.
 கடாயில் எண்ணெயைக் காயவைத்து, மாவை உருட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
இதற்கான side dish தேங்காய் சட்னி.

Monday, October 19, 2015

பயத்தம்பருப்பு கட்லெட்



தேவையானவை:

பயத்தம்பருப்பு  1 கப்
பொட்டுக்கடலை 1 கப்
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
ஏலக்காய் 2
சோம்பு 1மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் 3
------
சின்ன வெங்காயம் 5
கொத்தமலித்தழை 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் துருவல் 1/4கப்
உப்பு  எண்ணெய்தேவையானது
-------
செய்முறை:

பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.
பொட்டுக்கடலையை லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
பட்டை,கிராம்பு,ஏலக்காய்,சோம்பு,மிளகாய்வற்றல் நான்கினையும் சிறிது எண்ணெயில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பொடிசெய்த பயத்தம்பருப்பு,பொட்டுக்கடலை,மசாலா பொடி,சின்ன வெங்காயம்,தேங்காய் துருவல்,கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை,தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து (சிறிது தண்ணீர் தெளித்துக்கொள்ளவும்) பிசைந்து அரைமணி நேரம் ஊறவிடவும்.
பின்னர் சின்ன சின்ன கட்லெட்டுகளாக செய்து இட்லித்தட்டில் ஆவியில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.
தக்காளி சட்னியுடன் சாப்பிடலாம்.

புரோட்டீன் சத்து நிறைந்தது.

Monday, October 12, 2015

. தினை ரவா தோசை



தேவையானவை:
 தினை ரவா - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
தயிர் - ஒரு கப்
தண்ணீர்  2 கப்
இரண்டாக உடைத்த முந்திரிப் பருப்பு - 10 பருப்பு
மிளகு தூள் 1 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
சீரகம் - அரை தேக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
வெங்காயம் 2
----------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
மிளகாய் வற்றல் 2
-----------------

செய்முறை:


தினை அரிசியை வெறும் வாணலியில் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.வறுத்த அரிசியை மிக்சியில் பொடி பண்ணிக்கொள்ளவேண்டும்.

 ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பொடி பண்ணிய தினை ரவா,அரிசி மாவு,தயிர்,தண்ணீர் தேவையான உப்புசேர்த்து  ஆப்ப மாவை விட இளகியது போல் கரைக்க வேண்டும்.வேண்டுமென்றால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்
கரைத்த மாவுடன் சீரகத்தை பச்சையாக சேர்த்து அதனுடன்,மிளகு தூள் பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,வெங்காயம் சேர்த்து கலந்து வைக்கவும். கலந்த மாவை அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அதனுடன் சேர்க்கவேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து
அள்ளி தெளித்த மாதிரி லேசாக ஊற்றி இருபுறமும் எண்ணைய் விட்டு மொறு மொறு என்று வந்ததும் எடுக்கவும்.

இதற்கு சரியான side dish தக்காளி சட்னி,தேங்காய் சட்னி.

Monday, October 5, 2015

சாமை அரிசிப் பொங்கல்





தேவையானவை:

சாமை அரிசி  1 கப்
சீரகசம்பா அரிசி 3/4 கப

பயற்றம்பருப்பு 1/2 கப்

மிளகு 15

சீரகம் 1 டேபிள்ஸ்பூன்

இஞ்சி 1 துண்டு

முந்திரிபருப்பு 10

நெய் 1/4 கப்

தண்ணீர்  8 கப்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

கருவேப்பிலை ஒரு கொத்து

உப்பு தேவையானது



செய்முறை:

சாமை அரிசி,சீரகசம்பா அரிசி பயற்றம்பருப்பு மூன்றையும் தனித்தனியாக வாணலியில் எண்ணைய்விடாமல் வறுக்கவும்

 மூன்றையும்  குறிப்பிட்ட அளவு தண்ணீருடன் குக்கரில் வைத்து.ஆறு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.அப்பொழுதுதான் நன்றாக குழைவாக இருக்கும்

குக்கரை திறந்தவுடன் உப்பு சேர்க்கவும்.அதனுடன்


மிளகு,சீரகம் இரண்டையும் ஒன்று இரண்டுமாக mixy ல் பொடிபண்ணி சிறிது நெய்யில் பொரித்து சேர்க்கவும்.

இஞ்சியை தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கி போடவும்.

பெருங்காயத்தூள்,கருவேப்பிலை இரண்டையும் நெய்யில் பொரித்து போடவும்.முந்திரிப்பருப்பை நெய்யில் பொரித்துப்போடவும்.

கடைசியில் மீதமுள்ள நெய்யை உருக்கி ஊற்றி நன்றாக கிளறி இறக்கவும்.

சுவையான சாமைஅரிசிப் பொங்கல் ரெடி.

Monday, September 28, 2015

மாலை நேர மினி போண்டா



தேவையானவை:
 மைதா 1 கப்
அரிசிமாவு 1 மேசைக்கரண்டி
தயிர் 1/2 கப்
-----
மிளகு 1 மேசைக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
தேங்காய் சிறிய துண்டுகளாக 10
பெருங்காயத் தூள் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
செய்முறை:





ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மைதா மாவு,அரிசிமாவு, தயிர். மிளகு,பொடியாக நறுக்கிய இஞ்சி,தேங்காய் துண்டுகள்,பெருங்கயத்தூள்,கறிவேப்பிலை,பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

வாணலியில் தேவையான எண்ணெய் வைத்து பிசைந்த மாவை உருண்டைகளாக போட்டு எடுக்கவும்.
இந்த போண்டாவை தக்காளி சட்னியுடன் சாப்பிட ருசியாக இருக்கும்

Monday, September 21, 2015

வேப்பிலைக் கட்டி

எலுமிச்ச இலை


நார்த்த இலை



தேவையானவை:

நார்த்த இலை 1 கப்
எலுமிச்சை இலை 1 கப்
கறிவேப்பிலை 1/2 கப்
மிளகாய் வற்றல் 10
ஓமம் 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் சிறிது
உப்பு தேவையானது

செய்முறை:


எலுமிச்ச இலையையும் நார்த்த இலையையும் நன்றாகக் கழுவி துடைத்து நிழலில் உலர்த்தி எடுக்கவேண்டும்.(இலைகளை microwave oven ல் ஒரு microwave plate ல் பரப்பி 10 sec. வைத்தாலும் போதும்)

வெறும் கடாயில் இலைகளை எண்ணைய் விடாமல் வறுக்கவேண்டும்.பிறகு மிளகாய் வற்றல்,ஓமம்,பெருங்காயம் மூன்றையும் எண்ணைய் விட்டு வறுக்கவேண்டும்.

இலைகள் தவிர மற்றவற்றை உப்புடன் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து கடைசியில் இலைகளையும் சேர்த்து அரைக்கவேண்டும்.

வெய்யிலுக்கு தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.

Tuesday, September 15, 2015

சுண்டைக்காய் துவையல்





தேவையானவை:

சுண்டைக்காய் 1 கப்
வெங்காயம் 2
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு 1 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் 3
பெருங்காயம் 1 துண்டு
புளி சிறிதளவு
எண்ணெய்,உப்பு தேவையானது
------
செய்முறை:


சுண்டைக்காயின் காம்பை எடுத்துவிட்டு எண்ணெயில் தனியாக  நன்றாக வதக்கவும்
வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் பொன்னிறமாக வதக்கவும்.
உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல்,பெருங்காயம்,புளி எல்லாவற்றையும் சிறிது எண்ணெயில் நன்றாக வறுக்கவும்.
எல்லாவற்றையும் உப்புடன் சேர்த்து அரைக்கவும்.
கடைசியில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்துக்கொட்டவும்.
சுவையான சுண்டைக்காய் துவையல் ரெடி.

இந்த துவையலை சாதத்தோடு நல்லெண்ணய் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்.

Monday, September 7, 2015

வாழைத்தண்டு..மாதுளை...சாலட்



தேவையானவை:
வாழைத்தண்டு 1 கப் (பொடியாக நறுக்கியது)
மாதுளம் முத்துகள் 1 கப்
 சிவப்பு திராட்சை 5
மிளகுத் தூள் 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் 1
உப்பு சிறிதளவு
-----
செய்முறை:

பொடியாக நறுக்கிய வாழைத்தண்டை வேகவைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வேகவைத்த வாழைத்தண்டு துண்டுகள்,மாதுளம் முத்துகள், சிவப்பு திராட்சை,மிளகு தூள்,சிறிதளவு உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு  கலக்க வேண்டும். கடைசியில் எலுமிச்சை சாற்றினை பிழியவேண்டும்.

காலை உணவாக இதை சாப்பிடலாம்.உடலில் சர்க்கரையின் அளவையும் சீராக்கும்.

Tuesday, September 1, 2015

கார்ன் மஞ்சூரியன்



தேவையானவை:

பேபி கார்ன்  10
Spring onion   1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் 2
Soy    sauce 1  தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது2 தேக்கரண்டி
மிளகு தூள் 1 மேசைக்கரண்டி
கார்ன் மாவு 1 மேசைக்கரண்டி
மைதா மாவு 1 மேசைக்கரண்டி
உப்பு எண்னெய் தேவையானது
--------

செய்முறை:


பேபி கார்ன் ஐ அப்படியே Microwave H ல் சிறிது தண்ணீர் தெளித்து வைக்கவும்.
வெளியே எடுத்து  துண்டுகளாக நறுக்கவும்.

இஞ்சிபூண்டு விழுது 1 தேக்கரண்டி,மிளகு தூள்,கார்ன் மாவு,மைதாமாவு,மிளகாய் தூள் எல்லாவற்றையும் சிறிது உப்புடனும் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
அதில் நறுக்கிவைத்துள்ள கார்ன் துண்டுகளை பிரட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் வைத்து spring onion, பச்சைமிளகாய்,இஞ்சி பூண்டு விழுது (1 தேக்கரண்டி) வ்தக்கி அதில்
 அதில் பொரித்த கார்ன் துண்டுகளை சேர்த்து அதனுடன் soy sauce சேர்க்கவும்.தேவையான் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

Tuesday, August 25, 2015

ஓலன்



தேவையானவை:

பூசணி கீற்று 2

காராமணி 1 கப்

பச்சைமிளகாய் 4

தேங்காய் பால் 1 கப்

தேங்காய் எண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

செய்முறை:


பூசணி கீற்றுகளை தோலெடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

காராமணியை லேசாக எண்ணையில்லாமல் வறுத்து ஒரு கப் தண்ணீரில் வேகவைக்கவும்

பச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் கீறிக்கொள்ளவும்.

------

அடுப்பில் ஒரு அகண்ட பாத்திரத்தை வைத்து அதில் நறுக்கிய பூசணித்துண்டுகள்,வேகவைத்த காராமணி,

பச்சைமிளகாய், ஒரு கப் தண்ணீர்,சேர்த்து வேகவைக்கவும்.

பூசணித்துண்டுகள் நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்க்கவும்.

பின்னர் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

கடைசியில் தேங்காய் எண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும்.

------

ஓலனை சாதத்தோடு பிசைந்தும் சாப்பிடலாம்.

சப்பாத்தி,பூரிக்கும் சிறந்த side dish ஆகும். 

Monday, August 17, 2015

வரகு உப்புமா கொழுக்கட்டை

தேவையானவை:

வரகரிசி 1 கப்          
                                                  
-------
அரைக்க:
துவரம்பருப்பு 2 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் 3
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
தெங்காய்துருவல் 1/2 கப்
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கடலைபருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
மிளகாய் வற்றல் 2
-------
செய்முறை:




வரகரிசியைவெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்..
அரைக்கக்கொடுத்துள்ள பொருட்களை பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து 2 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
(ஒரு கப் வரகரிசிக்கு  2 1/2 கப் தண்ணீர் வீதம்)
அரைத்த விழுதையும் தேவையான உப்பையும் அதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
தண்ணீர் கொதித்தவுடன்  வரகசிசியை மெதுவாக தூவி கட்டியில்லாமல் கிளறவேண்டும்.
தேவையானால் சிறிது எண்ணெய் சேர்த்து கிளறலாம். அல்லது
(வரகரிசி,அரைத்தவிழுது.தண்ணீர்.உப்பு,தாளித்தவைகள் எல்லாவற்றையும் குக்கரில் வைக்கும் பாத்தி


ரத்தில் வைத்து 4 விசில் கழித்து அடுப்பை அணைக்கவேண்டும்,)

ஆறினவுடன் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் ஆவியில் வைத்து   ஐந்து நிமிடம் கழித்து எடுக்க
சுவையான வரகு உப்புமா கொழுக்கட்டை ரெடி.

Tuesday, August 11, 2015

கேழ்வரகு , பருப்பு அடை





தேவையானவை:
கேழ்வரகு மாவு 1 கப்

புழுங்கலரிசி 1 கப்
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
பயத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை 1 டேபிள்ஸ்பூன்
நிலக்கடலை 10
மிளகாய் வற்றல் 5
பச்சைமிளகாய் 5
பெருங்காயம் 1 துண்டு
----------------
வெங்காயம் 2

------

உப்பு,எண்ணைய் தேவையானது

-------

செய்முறை:



 





தேவையானவையில் குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும்  கேழ்வரகு மாவை தவிர்த்து)

6 மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

(மிகவும் நைசாக அரைக்கவேண்டாம்).

அரைத்த மாவில் கேழ்வரகு மாவையும்,பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அடை மாவை ஒரு கரண்டி எடுத்து ஊற்றி

சுற்றி எண்ணைய் விடவேண்டும்.

நன்றாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு எண்ணைய் விட்டு முறுகலாக வந்ததும் எடுக்கவேண்டும்

Monday, August 3, 2015

கொத்தவரங்காய் இனிப்பு கூட்டு


தேவையானவை
கொத்தவரங்காய் 1/4 கிலோ

துவரம்பருப்பு 1/2 கப்
புளி எலுமிச்சை அளவு
பொடித்த வெல்லம் 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
-----
அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
இஞ்சி சிறிய துண்டு
பச்சைமிளகாய் 2
மிளகு 10
------

தாளிக்க:
தேங்காய் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:





கொத்தவரங்காயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
துவரம்பருப்பை மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். (4 விசில்)
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை பச்சையாக அரைத்துக்கொள்ளவும்.
---
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதித்தவுடன் நறுக்கிய கொத்தவரங்காயை போட்டு வேகவைக்கவும்.
காய் நன்கு வெந்தவுடன் தேவையான உப்பையும் வேகவைத்த பருப்பையும் சேர்த்து கொதிக்கவிடவும்.
பின்னர் புளியை கெட்டியாக கரைத்து விட்டு அதனுடன் அரைத்த விழுதையும் சேர்த்து மீண்டும் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
எல்லாம் ஒன்று சேர்ந்து சிறிது கெட்டியாக வரும்போது பொடித்த வெல்லம் சேர்த்து இறக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கூட்டுடன் சேர்க்கவும்.

Sunday, July 26, 2015

" ஜில் ஜில் சீரகம்"




தேவையானவை:

சீரகம் 1/2 கப்
தேங்காய் பால் 1 கப்
வெல்லம் பொடித்தது 1/2 கப்
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
----------

செய்முறை:

சீரகத்தை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
ஊறிய பின் வடிகட்டி நைசாக சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவேண்டும்.
வெல்லத்தை பொடி செய்து ஒருகப் தண்ணீரில் கரைக்கவும்.வடிகட்டவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்த சீரக விழுது வடிகட்டிய வெல்லக்கரைசல்,தேங்காய் பால்,ஏலத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
Fridge ல் ஒரு மணி நேரம் வைத்து குடிக்கலாம்.

'ஜில் ஜில் சீரகம்' கோடையில் உடலை குளிர்விக்கும்.
இரவில் அருந்தினால் நல்ல தூக்கம் வரும்.

Sunday, July 19, 2015

'தினை நூடுல்ஸ் பிரியாணி" .- குமுதம் சிநேகிதி

குமுதம் சிநேகிதி 23.07.2105 இதழில் ' குக்கரி' போட்டியில் என்னுடைய 'தினை நூடுல்ஸ் பிரியாணி" முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.


Wednesday, July 15, 2015

புளி அவல்



தேவையானவை:
கெட்டி அவல் 1 கப்
புளி ஒரு எலுமிச்சை அளவு
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் தேவையானது
உப்பு தேவையானது
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
வேர்க்கடலை 10
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:

அவலை நன்றாக தண்ணீரில் அலச வேண்டும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து லேசாக சூடு பண்ணவேண்டும்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அவல்,புளித்தண்ணீர்,மஞ்சள்தூள்,தேவையான உப்பு சேர்த்து பிசறி மூடி வைக்கவேண்டும்.
பத்து நிமிடம் அப்படியே ஊறவைக்கவேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து ஊறவைத்த அவலை சேர்த்து
சிறிது நேரம் அடுப்பை slim ல் வைத்து கிளற சுவையான புளி அவல் ரெடி.

Saturday, July 4, 2015

பருப்பு உருண்டைக் குழம்பு




தேவையானவை:
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைபருப்பு 1/2 கப்
புளி ஒரு எலுமிச்சை அளவு
வெங்காயம் 2
பூண்டு 5 பல்
தக்காளி 2
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு எண்ணெய் தேவையானது
-------
அரைக்க:
சோம்பு 1 தேக்கரண்டி
மிளகாய் வற்ற்ல் 2
பச்சைமிளகாய் 2
தனியா தூள் 1 தேக்கரண்டி
வெங்காயம் 1
பூண்டு 2 பல்
------
தேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி
கசகசா 1/2 தேக்கரண்டி

      பருப்பு உருண்டைகளை ஆவியில் வைத்து எடுத்தது


செய்முறை:

துவரம்பருப்பையும் கடலைப்பருப்பையும் அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.இதனுடன் அரைக்கக்கொடுத்துள்ள சோம்பு,மிளகாய் வற்றல்,பச்சைமிளகாய்.
தனியாதூள்,வெங்காயம் (1) பூண்டு (2 ) பல் எல்லாவற்றையும் உப்புடன்  நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

தேங்காய் துருவல், கசகசா இரண்டையும் தனியே நைசாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்  துவரம்பருப்பு,கடலைபருப்பு விழுது,கறிவேப்பிலை சேர்த்து உருண்டைகளாக்கி குக்கரில்  ஆவியில் வேகவைத்து எடுக்கவேண்டும்

அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் மீதமுள்ள வெங்காயம்,பூண்டு,தக்காளி மூன்றையும் பொடியாக நறுக்கி மஞ்சள். தூள்,மிளகாய் தூள்  சேர்த்து வதக்கவேண்டும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து தேவையான உப்புடன் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
தேங்காய் துருவல்,கசகசா விழுதினை சேர்க்க வேண்டும்.
கடைசியில் வேகவைத்த பருப்பு உருண்டைகளை சேர்த்து சிறிது நேரம் கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
(பூண்டு சேர்க்காமலும் செய்யலாம்.)

Monday, June 22, 2015

ராகி..மாம்பழ ஸ்மூத்தி



தேவையானவை:

ராகி மாவு 1 கப்
மாம்பழத்துண்டுகள் 1 கப்
பால் 1/2 கப்
-----

செய்முறை:





ஒரு கப் ராகி மாவில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து அடுப்பில் வைத்து கிளறவும்.
கஞ்சி பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து கஞ்சியை ஆறவிடவும்.

மிக்சியில் முதலில் மாம்பழத்துண்டுகளை அரைத்துவிட்டு பின்னர் அதனுடன்  ஆறவைத்த ராகி கஞ்சி,, பால் இரண்டையும்  சேர்த்து விப்பரில் அடிக்கவேண்டும்

சுவையான ராகி..மாம்பழ ஸ்மூத்தி ரெடி.

எலும்புக்கு உறுதியைத் தரும்.
ராகியில் கால்சியமும் மாம்பழத்தில் பீட்டா கரோட்டினும் அதிகம் உள்ளன.

Monday, June 15, 2015

வரகு ..,பயறு. கிச்சடி.




தேவையானவை:

முழு பயறு 1 கப்
வரகரிசி  1/4 கப்
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 3
இஞ்சி ஒரு துண்டு
பட்டை 1 துண்டு
கிராம்பு 3
சீரகம் 1 மேசைக்கரண்டி
நெய் 1 மேசைக்கரண்டி
தண்ணீர்   5 கப்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு.எண்ணெய் தேவையானது

------
செய்முறை:


முழு பயற்றை நான்கு மணிநேரம் 3 கப் தண்ணீரில் ஊறவைத்து அப்படியே குக்கரில் வைத்து மஞ்சள் தூள் சேர்த்து 6 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வரகரிசியை ஒரு கப் தண்ணீரில்  இரண்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வைத்து நான்கு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி  பொடியாக நறுக்கிய பச்சைமிளக்காய்,இஞ்சி இரண்டையும் நன்றாக வதக்கவும்.
அதனுடன் குக்கரில் இருந்து எடுத்த முழுபயறு,வரகரிசி இரண்டையும் தேவையான உப்புடனும் மீதியுள்ள ஒரு கப் தண்ணீருடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
எல்லாம் ஒன்றாக சேர்ந்து நன்றாக வெந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரத்தில் அணைக்கவும்.

நெய்யில் பட்டை,கிராம்பு,சீரகம் தாளித்து இதனுடன் சேர்க்கவும்.
கடைசியில் கொத்தமல்லித்தழையை தூவவும்.

Monday, June 8, 2015

பேரீச்சை,பாதாம் இனிப்பு லட்டு



தேவையானவை:

பேரீச்சம்பழம் 10
பாதாம் பருப்பு 10
வால்நட்     10
முந்திரிப்பருப்பு 5
பொட்டுக்கடலை 1/4 கப்
ஏலக்காய்த்தூள் 1 தேக்கரண்டி
நெய் 1 மேசைக்கரண்டி
-------

செய்முறை:


பாதாம் பருப்பை நெய்யில் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.
பேரீச்சம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

பாதாம்பருப்பு,பேரீச்சம்பழத்துண்டுகள்,ஏலக்காய்த்தூள் மூன்றையும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றவேண்டும்.
பொட்டுக்கடலை,முந்ததிரிப்பருப்பு இரண்டையும் நெய்யில் வறுத்து வால்நட்டுடன் சேர்த்து பொடிபண்ண வேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பாதாம் பேரீச்சம்பழக் கலவை,பொட்டுக்கடலை,முந்திரிப் பொடி இரண்டையும் கலந்து நன்றாக பிசைய வேண்டும்'
தண்ணீர் விட வேண்டாம். பின்னர் உருண்டைகளாக உருட்டவேண்டும்.

இந்த இனிப்பு உருண்டை இரும்புசத்து மிகுந்ததாக இருப்பதால் ரத்த சோகைக்கு நல்லது.
குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Sunday, May 31, 2015

நெல்லி, மல்லி சட்னி



தேவையானவை:

வேகவைத்த நெல்லிக்காய் 4
கொத்தமல்லித்தழை 1 கப்
பச்சைமிளகாய் 2
பொடித்த வெல்லம் 1 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:


வேகவைத்த நெல்லிக்காய்,கொத்தமல்லித்தழை,பச்சைமிளகாய்.பொடித்த வெல்லம் தேவையான உப்பு சேர்த்து அரைக்கவும்.
அரைத்த சட்னியில் எலுமிச்சை சாறு சேர்த்து கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை தாளிக்கவும்.
தித்திப்பும் புளிப்பும் இணைந்த ருசியான சட்னி.

Monday, May 25, 2015

நீர் தோசை




தேவையானவை:

பச்சரிசி 1 கப்
துருவிய தேங்காய் 1/2 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது
---------
செய்முறை:


அரிசியை மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
அரிசி ஊறியபின் தண்ணீரை வடித்துவிட்டு துருவிய தேங்காயுடன் மிக்சியில் நைசாக அரைக்கவேண்டும்.
தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்து நான்கு மணி நேரம் கழித்து தோசை வார்க்கலாம்.
அரைத்த மாவு நீர்க்க இருக்க வேண்டும்.








தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து மாவை  ரவா தோசை வார்ப்பது போல் பரவலாக ஊற்றி வார்த்து எடுக்கவேண்டும்.
வெங்காயம் தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவையோ சுவை.

Tuesday, May 19, 2015

மாம்பழம்,பப்பாளி மில்க் ஷேக்



தேவையானவை:

மாம்பழம் 1
பப்பாளி 1
வாழைப்பழம் 1
பேரீச்சம்பழம் 2
பாதாம் 5
பால் 2 கப்
-------
செய்முறை:




மாம்பழத்தை தோலை சீவிவிட்டு நறுக்கிக்கொள்ளவும்.
பப்பாளியையும் தோலை சீவிவிட்டு நறுக்கிக்கொள்ளவும்.
வாழைப்பழத்தை தோலை எடுத்துவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
மிக்சியை எடுத்துக்கொண்டு அதில் முதலில் பாதாம் பருப்பை சிறிது பாலுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் நறுக்கிய மாம்பழம்,பப்பாளி,வாழைப்பழம்,பேரீச்சம்பழம்,பால் சேர்த்து விப்பரில் அரைக்கவும்.

வெயிலுக்கு இதமானது.
 குழந்தைகளும்  விரும்பி சாப்பிடுவார்கள்.

Monday, May 11, 2015

சுரைக்காய் கூட்டு.

தேவையானவை:



சுரைக்காய் 1
கடலைபருப்பு 1/4 கப்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணய் தேவையானது
-----
அரைக்க:
தேங்காய் துருவல் 1/4 கப்
பச்சைமிளகாய் 3
இஞ்சி 1 துண்டு
நிலக்கடலை 1 டேபிள்ஸ்பூன்
-----
தாளிக்க:
தேங்காயெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
----
செய்முறை:


சுரைக்காயை தோலை எடுத்துவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
கடலைபருப்பை தண்ணீரில் பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
-----
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்த கடலைபருப்பை சிறிது தண்ணீருடன் சேர்த்து வேகவைக்கவும்..பின்னர் நறுக்கிய சுரைக்காய் துண்டுகளை மஞ்சள்தூளுடன் சேர்த்து வேகவிடவும்.
சுரைக்காய் வெந்ததும் தேவையான உப்பு,அரைத்த விழுது சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்.
இறக்கியவுடன் தேங்காயெண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
சுரைக்காய் கூட்டை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.
பூரி சப்பாத்திக்கு ஏற்றது.

Sunday, May 3, 2015

ஓட்ஸ் பாயசம்

ஓட்ஸ் பாயசம்

தேவையானவை:

ஓட்ஸ்  1 கப்
பால் 2 கப்
பொடித்த வெல்லம்  1/2 கப்
நெய் 1 மேசைக்கரண்டி
முந்திரிப்பருப்பு 10
ஏலத்தூள் 1 தேக்கரண்டி
திராட்சை  10
-------------------------

செய்முறை:




ஒரு வாணலியில் சிறிது நெய் சேர்த்து ஓட்ஸை பொன்னிறமாக வறுக்கவும்.
வறுத்த ஓட்ஸை microwave bowl ல் அரை கப் தண்ணீர் சேர்த்து "H" ல் இரண்டு நிமிடம் வைத்தால் ஓட்ஸ் நன்றாக குழைந்துவிடும்.

இரண்டு கப் பாலை குக்கருக்குள் வைக்கும் ஒரு பாத்திரத்தில் வைத்து வெயிட் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 20 நிமிடம் கழித்து அணைக்கவும்.

வெல்லத்தை அரை கப் தண்ணீருடன் அடுப்பில் வைத்து நன்றாக கரைந்தவுடன் சிறிது கொதிக்கவிட்டு இறக்கவும்.

குக்கரில் இருந்து எடுத்த பால் ஆறினவுடன் அதனுடன் வேகவைத்த ஓட்ஸ்,வடிகட்டிய வெல்லம்,ஏலத்தூள் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
முந்திரி,திராட்சை இரண்டையும் நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
  சுவையான ஓட்ஸ் பாயசம் ரெடி.

Wednesday, April 29, 2015

காளன்

தேவையானவை:
சேனைக்கிழங் கு      1 கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது)
துருவிய தேங்காய் 3/4 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
வெந்தயம் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
மிளகுதூள் 1 தேக்கரண்டி
நெய் 1 தேக்கரண்டி
தயிர் 1 கப்
உப்பு தேவையானது
------------
தாளிக்க:
தேங்காய் எண்ணைய் 1 மேசைக்கரண்டி
கடுகு1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் 2
பச்சைமிளகாய்2
கறிவேப்பிலை சிறிதளவு
--------
செய்முறை:

தேங்காய் துருவல் சீரகம் இரண்டையும் சிறிது தண்ணீர் தெளித்துவிழுது போல அரைத்துக்கொள்ளவும்.
வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
-----------
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரை கப் தண்ணீர் விட்டு ஒரு தேக்கரண்டி மிளகு தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவைக்கவேண்டும்.
பின்னர் வடிகட்டி அந்த தண்ணீரை மீண்டும் பாத்திரத்தில் வைத்து அதனுடன் நறுக்கிய சேனைக்கிழங்கு துண்டுகள் .மஞ்சள் தூள்,தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
சேனைக்கிழங்கு சிறிது வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் துருவல்,சீரக விழுதையும்,வெந்தய விழுதையும் நெய்யுடன் சேர்த்து சிறிது கொதிக்கவிடவும்.
பின்னர் தயிர் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவேண்டும்.(தயிர் சேர்த்த பின் கொதிக்கவைக்கக்கூடாது)
வாணலியில் தேங்காயெண்ணைய் வைத்து கடுகு,கிள்ளிய சிவப்பு மிளகாய்,குறுக்காக வெட்டிய பச்சைமிளகாய்,கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.  

Wednesday, April 22, 2015

பீன்ஸ் கொள்ளு பொரியல்






தேவையானவை:




பொடியாக நறுக்கிய பீன்ஸ் 1 கப்

தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி

------

கொள்ளு 1/4 கப்

கடலைபருப்பு 1 மேசைக்கரண்டி

பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி

மிளகாய் வற்றல் 2

பெருங்காயம் 1 துண்டு

-------

உப்பு,எண்ணெய் தேவையானது

-------

தாளிக்க:

கடுகு 1 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை ஒரு கொத்து

-----

செய்முறை:









கொள்ளை முதல் நாள் இரவே தண்ணீரில் உறவைக்கவேண்டும்.

கடலைபருப்பு,பொட்டுக்கடலை இரண்டையும் அரை மணி நேரம் ஊறவைத்தால் போதும்.

ஊறிய கொள்ளை வடிகட்டி அதனுடன் ஊறவைத்த கடலைபருப்பு,பொட்டுக்கடலை,மிளகாய் வற்றல்,பெருங்காயம்

தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து அரைக்கவேண்டும்.

அரைத்த விழுதை இட்லி தட்டில் ஆவியில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.

பின் அதை தட்டில் போட்டு உதிர்க்கவும். கட்டியாக இருந்தால் மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.




பீன்ஸை Microwave bowl ல் வைத்து Microwave "H" ல் ஐந்து நிமிடம் வைத்து எடுக்கவும்.

வெளியே எடுத்து அதனுடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.




அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வேகவைத்த பீன்ஸ் யை சேர்க்கவும்.

அதனுடன் உதிர்த்த கொள்ளு பருப்பை சேர்த்து நன்றாக கலக்கவும்.

கடைசியில் தேங்காய் துருவலை சேர்த்து இறக்கவும்.




பீன்ஸ் கொள்ளு பொரியலை சாதத்துடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Wednesday, April 15, 2015

பொட்டுக்கடலை துவையல்



தேவையானவை:
பொட்டுக்கடலை 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
வற்றல் மிளகாய் 4
உளுத்தம்பருப்பு  2 மேசைக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
செய்முறை:


பொட்டுக்கடலையை எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும்.
தேங்காய் துருவல்,வற்றல் மிளகாய்,உளுத்தம்பருப்பு,பெருங்காயம் நான்கினையும் எண்ணெயில் வறுத்துக்கொள்ளவும்.
எல்லாவற்றையும் தேவையான உப்பு,தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

சாதாரணமாக நாம் பருப்பு துவையலில் துவரம்பருப்பும்,கடலைப்பருப்பும் சேர்ப்போம். ஆனால் இந்த துவையல் மிகவும் ருசியாக இருக்கும்.
சாதத்தில் சிறிது நல்லெண்ணையுடன் இந்த துவையலை பிசைந்து சாப்பிடவேண்டும்.

பொட்டுக்கடலையில் இரும்பு சத்து உள்ளது.

Tuesday, April 7, 2015

மசாலா மோர்



தேவையானவை:

நெல்லிக்காய் 1
இஞ்சி 1 துண்டு
மாங்காய் 1 துண்டு
கறிவேப்பிலை சிறிதளவு
புதினா   சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
தயிர் 1கப்
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
உப்பு தேவையானது
--------

செய்முறை:


நெல்லிக்காயை microwave bowl ல் சிறிது தண்ணீர் வைத்து "H" ல் ஒரு நிமிடம் வைத்து எடுத்தால் நன்கு வெந்திருக்கும். வேகவைத்த
நெல்லிக்காய்,இஞ்சி,மாங்காய்,கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை'
புதினா  எ ல்லாவற்றையும் மிக்சியில் சிறிது தண்ணீர் தெளித்து நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்,
அரைத்த விழுதில் மீண்டும் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டிக்கொள்ளவேண்டும்.
வடிகட்டிய விழுதுடன் ஒரு கப் தயிர்,பெருங்காயத்தூள், தேவையான உப்பு சேர்த்து மிக்சியில் விப்பரில் அடிக்கவேண்டும்.

மசாலா மோர் வெயிலுக்கு ஏற்றது.தாகம் அடங்கும்.

Monday, March 30, 2015

வரகு சர்க்கரை பொங்கல்



தேவையானவை:



வரகரிசி 1 கப்

பயற்றம்பருப்பு 1 மேசைக்கரண்டி

பொடித்தவெல்லம் 1 1/4

தண்ணீர் 4

நெய் 1/4 கப்

பால் 1/2 கப்

-----------------------

ஜாதிக்காய் 1 துண்டு

குங்குமப்பூ 1 டீஸ்பூன்

ஏலக்காய் 4

முந்திரிபருப்பு 10

கேசரிப்பவுடர் 1 /2டீஸ்பூன்



செய்முறை:




ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு பயற்றம்பருப்பை எண்ணைய் விடாமல் பொன்னிறமாக வறுக்கவும்.

வரகரிசியை சிறிது நெய்யில் நன்றாக வறுக்கவும்.

வெல்லத்தை அரை கப் தண்ணீரில் அடுப்பில் வைத்து கரையவிட்டு வடிகட்டவும்.

குக்கரில் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வறுத்த பயத்தம்பருப்பு, வறுத்த வரகரிசி நான்கு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ( ஐந்து விசில்) எடுக்கவும்.

குக்கரில் இருந்து எடுத்து ரெடியாக உள்ள வடிகட்டிய வெல்லத்தை சேர்த்து கிளறவும். வரகரிசியும் வெல்லமும் ஒன்று சேர்ந்து சர்க்கரை பொங்கல் பக்குவம் வரும்.


ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்துக்கொண்டு அதில் கேசரிப்பவுடர்,குங்குமப்பூ,ஏலக்காய் இவற்றைப்போடவும்.ஜாதிக்காய் துண்டை நெய்யில் வறுத்து பொடிசெய்து அதையும் பாலில் சேர்த்து கரைத்து  பொங்கலில் சேர்க்கவும் மீதமுள்ள பாலையும் பொங்கலில் சேர்க்கவும்.,முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.மீதியுள்ள நெய்யை உருக்கி பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

Tuesday, March 24, 2015

வடு மாங்காய்

தேவையானவை:
மாவடு 1 கிலோ
உப்பு 1 கப்
மிளகாய் பொடி 1 கப்
கடுகு 1/4 கப்
மஞ்சள் துண்டு 3
விளக்கெண்ணைய் 1/4 கப்
தண்ணீர் 1 கப்
-----
செய்முறை:



மாவடு வாங்கும்பொழுது காம்புகள் உள்ள மாவடுவாக பார்த்து வாங்கவேண்டும்.
மாவடுவை நன்றாக அலசி தண்ணீரை வடிய வைத்து ஒரு டவலால் தண்ணீர் போக துடைக்கவேண்டும்.
ஒரு கப் தண்ணீரில் ஒரு கப் உப்பு சேர்த்து தண்ணீர் பாதியாகும் வரை கொதிக்கவைக்கவேண்டும்.
கடுகையும் மஞ்சள் துண்டையும் சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
-----
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மாவடுவை போட்டு விளக்கெண்ணையை பரவலாக தடவவேண்டும்..அதனுடன் கடுகு மஞ்சள் விழுதை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.
ஊறுகாய் போடும் ஜாடியை நன்றாக துடைத்து முதலில் சிறிது உப்பு தண்ணீர் அடியில் ஊற்றவும்.
அதன் மேல் கொஞ்சம் கலந்த மாவடுவை சிறிது போட்டு அதன் மேல் சிறிது உப்பு தண்ணீரும் மிளகாய் பொடியும் போடவும்.
இதே மாதிரி மாவடுவும்,உப்பும்,மிளகாய் பொடியுமாக கடைசிவரை போட வேண்டும்.
இரண்டு நாள் கழித்து ஜாடியை ஒரு குலுக்கு குலுக்கி நன்கு மூடி வைக்கவேண்டும்.

(மீள் பதிவு )







Tuesday, March 17, 2015

தயிர் மணத்தக்காளி





தேவையானவை:

பச்சை மணத்தக்காளி  1கப்
தயிர் 1 கப்
உப்பு தேவையானது
--------

செய்முறை:



பச்சை மணத்தக்காளியை ஒவ்வொன்றாக ஆய்ந்துவிட்டு தண்ணீரில் நன்றாக அலசிக்கொண்டு வடிகட்டவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வடிகட்டிய மணத்தக்காளி,தயிர்,தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.
தயிர் மணத்தக்காளி ரெடி.
தயிர் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

மணத்தக்காளி குடல் புண்ணை ஆற்றும்.
அல்சர் வராமல் தடுக்கும்.

Thursday, March 12, 2015

வெல்ல அடை,உப்புஅடை ( காரடையான் நோன்பு

14.3.2015 அன்று
 காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.அன்று வெல்ல அடை,உப்புஅடை என்று இருவகை அடைகள் செய்வது வழக்கம்.
----
முதலில் பச்சரிசி அரைகிலோவை அரைமணிநேரம் ஊறவைத்து களைந்து வடித்து காயவைத்து நைசாக அரைத்து சலித்துக்கொள்ளவும்.வாசனை வரும்வரை வறுக்கவும்.   (அல்லது பதப்படுத்திய அரிசி மாவு கடைகளில் கிடைக்கிறது. அதை நன்றாக வறுத்து உபயோகப்படுத்தலாம்.)

-
வெல்ல அடை:
தேவையானவை:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/2 கப்
தேங்காய் சிறிய பற்களாக கீரியது அரை கப்
வெல்லம் (பொடித்தது) 1 கப்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
தண்ணீர் 2 கப்

செய்முறை:






காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும்.
வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் "தள தள' என்று கொதிக்கும்போது காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.
வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.
மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து வடைபோல் தட்டி
இட்லி பாத்திரத்தில் ஆவியில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.

உப்பு அடை:
தேவையானவை:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/2 கப்
தேங்காய் துண்டுகள் 1/2 கப்
தண்ணீர் 2 கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:

காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் இரண்டு கப் தண்ணீரை உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் வெந்த காராமணி,தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்த மாவை
தூவிக்கொண்டே கிளறவும்.
மாவு நன்றாக வெந்ததும் வடைபோல தட்டி இட்லி தட்டில் ஆவியில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.

Monday, March 9, 2015

பீர்க்கங்காய் துவையல்



தேவையானவை:

பீர்க்கங்காய் 2


மிளகாய்வற்றல் 4
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் ஒரு துண்டு
புளி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது

தாளிக்க:

கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
--------
செய்முறை:


பீர்க்கங்காயின் தோலை சீவிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து நறுக்கிய துண்டுகளை வதக்கிக்கொள்ளவும்.

அதே வாணலியில் மிளகாய்வற்றல்,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,புளி நான்கையும் சிவக்க வறுக்கவேண்டும்.
மிக்சியில் முதலில் இந்த நான்கையும் தேவையான உப்புடன் அரைத்துவிட்டு அதனுடன் வதக்கிய பீர்க்கங்காய் துண்டுகளைப் சேர்த்து விப்பரில் ஒரு சுற்று சுற்ற வேண்டும்.

கடைசியில் தாளிக்கவும்.

பீர்க்கங்காய் இரத்தத்தை சுத்திகரித்து உடல் சூட்டை தணிக்கும்.

Tuesday, March 3, 2015

இஞ்சி மோர்




தேவையானவை:
மோர் 2 கப்
இஞ்சி ஒரு துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லித்தழை 1/2 கப்
எலுமிச்சம்பழம் 1
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
சீரகத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது

செய்முறை:

பச்சைமிளகாய்,இஞ்சி,கொத்தமல்லித்தழை மூன்றையும் சிறிது தண்ணீர் தெளித்து விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
இரண்டு கப் மோரை மிக்சியில் போட்டு நன்றாக விப்பரில் அடித்துக்கொள்ளவேண்டும்.

கடைந்த மோரில் அரைத்த விழுது தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
பெருங்காய்த்தூள்,சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கடைசியில் எலுமிச்சம்பழத்தை பிழிந்து குடித்தால் தாகம் அடங்கும்

Monday, February 23, 2015

ஓட்ஸ் பொங்கல்






தேவையானவை:


ஓட்ஸ் 1 கப்

பயற்றம்பருப்பு 1/4 கப்
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி

மிளகு 10
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்

இஞ்சி 1 துண்டு

முந்திரிபருப்பு 10

நெய்  1 மேசைக்கரண்டி

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
நெய் 2 மேசைக்கரண்டி

கருவேப்பிலை ஒரு கொத்து

உப்பு தேவையானது
----------------------------

செய்முறை:


பயற்றம்பருப்பை அரை கப் தண்ணீர் மஞ்சள தூள் சேர்த்து குக்கரில் நன்றாக குழைய வேகவைக்கவேண்டும்.

ஒரு microwave bowl ல்  ஒரு கப் ஓட்ஸுடன் 1 1/2 கப் தண்ணீர் விட்டு "H" ல் ஐந்து நிமிடம் வைத்தால் ஓட்ஸ் நன்றாக வெந்துவிடும்

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வேகவைத்த பயற்றம்பருப்பு,வெந்த ஓட்ஸ்  தேவையான உப்பு மூன்றையும் சேர்த்து கிளறவேண்டும்.


 அதனுடன் மிளகு,சீரகம் இரண்டையும் ஒன்று இரண்டுமாக mixy ல் பொடிபண்ணி சிறிது நெய்யில் பொரித்து சேர்க்கவும்.

இஞ்சியை தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கி போடவும்.

பெருங்காயத்தூள்,கருவேப்பிலை இரண்டையும் நெய்யில் பொரித்து போடவும்.முந்திரிப்பருப்பை நெய்யில் பொரித்துப்போடவும்.

கடைசியில் மீதமுள்ள நெய்யை உருக்கி ஊற்றி நன்றாக கிளறி இறக்கவும்.

நார்சத்து மிகுந்த,சத்து நிறைந்த உணவு இது.

Tuesday, February 17, 2015

எள்ளு முறுக்கு





தேவையானவை:

பச்சரிசி மாவு 1 கப்
பொட்டுக்கடலை மாவு 1/4 கப்
கடலை மாவு 1/4 கப்
எள் 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
செய்முறை:


வாணலியில் அரை கப் தண்ணீர் விட்டு அதனுடன் மிளகாய் தூள்,பெருங்காய்த்தூள்,தேவையான உப்பு சேர்த்து  நன்கு கொதிக்கவைக்கவும்.
பின்னர் அதனுடன் கடலை மாவு,பொட்டுக்கடலை மாவு,எள் சேர்த்து கிளறவும்.கிளறிய மாவு முறுக்கு மாவு பதத்தில் இருக்கவேண்டும்.
வேண்டுமென்றால் தண்ணீர் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம்.

வாணலியில் எண்ணைய் வைத்து காய்ந்த பின் தேன்குழல் படியில் முறுக்கு வில்லையைப்போட்டு,சிறிது மாவை அதில் சேர்த்து எண்ணையில் பிழியவும்.
இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

Monday, February 9, 2015

ஆரஞ்சு தோல் துவையல்



தேவையானவை:

ஆரஞ்சு தோல் 1 கப் (நறுக்கியது)
மிளகாய் வற்றல் 4
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
புளி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
------

செய்முறை:


வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து பொடியாக நறுக்கிய ஆரஞ்சு தோலை நன்றாக வதக்கவேண்டும்.
மிளகாய் வற்றல்,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,புளி நான்கையும் எண்ணெயில் வறுக்கவேண்டும்.
வறுத்ததை வதக்கிய ஆரஞ்சு தோலுடன் தேவையான உப்பு சேர்த்து அரைக்கவேண்டும்.
கடைசியில் தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவேண்டும்.

இந்த துவையலை சாதத்தோடு நல்லெண்ணைய் சேர்த்து சாப்பிடலாம்.

Sunday, February 1, 2015

சீரகம்-மிளகு-பூண்டு ரசம்



தேவையானவை:

தக்காளி 2
பூண்டு 10 பல்
புளி எலுமிச்சை அளவு
பெருங்காயம் 1 துண்டு
உப்புஎண்ணெய் தேவையானது
கொத்தமல்லித்தழை  சிறிதளவு
------
அரைக்க:
மிளகாய் வற்றல் 3
தனியா 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
துவரம்பருப்பு 1 தேக்கரண்டி
------
தாளிக்க:
கடுகு
மிளகாய் வற்றல் 1
கறிவேப்பிலை சிறிதளவு
நெய் 1 மேசைக்கரண்டி
-------
செய்முறை:

அரைக்கக்கொடுத்துள்ளவைகளை தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைத்து விழுது போல அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

வாணலியில் எண்ணெய் வைத்து பொடியாக நறுக்கிய தக்காளி,பூண்டு இரண்டையும் நன்றாக வதக்கவேண்டும்.
அதனுடன் புளித்தண்ணீர், இரண்டு கப்தேவையான உப்பு,பெருங்காயம் சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவேண்டும்.
அரைத்து வைத்துள்ள விழுதுடன் சிறிது தண்ணீர்  சேர்த்து அதனுடன் கலந்து  சிறிது நேரம்  கொதிக்க வைத்து நுரைத்து வந்தவுடன் அடுப்பை அணைக்க வேண்டும்.

நெய்யில் கடுகு,கிள்ளிய மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.
கடைசியில் கொத்தமல்லித்தழையை தூவவேண்டும்.

Friday, January 23, 2015

தினை இட்லி


தேவையானவை:
தினை 3 கப்
உளுத்தம்பருப்பு 3/4 கப்
அவல் 1/4 கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி
----
செய்முறை:

தினையை தனியாகவும்.உளுத்தம்பருப்பு வெந்தயம் இரண்டையும் சேர்த்தும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
அவலை அரை மணிநேரம் ஊறவைத்தால் போதும்.
உளுத்தம்பருப்பு,வெந்தயம்,அவல் மூன்றையும் சேர்த்து நன்றாக நைசாக அரைக்கவேண்டும்.
தினையை தனியாக அரைத்து அரைத்து வைத்துள்ள உளுத்தம்பருப்பு,வெந்தயத்துடன் தேவையான உப்பு சேர்த்து கலக்கவேண்டும்.
ஆறு மணிநேரம் கழித்து மாவு புளித்துவிடும்.பின்னர் இட்லியாக வார்க்கலாம்

தினையில் புரோட்டீன்,நார்சத்து உள்ளது.

Thursday, January 15, 2015

வாழைத்தண்டு கூட்டு




தேவையானவை:

வாழைத்தண்டு 1
கெட்டி மோர் 1 கப்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
----
அரைக்க:
சீரகம் 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 4
தேங்காய் துருவல் 1/2 கப்
----
தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காயெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

வாழைத்தண்டை பட்டை,நார் நீக்கி சுத்தம் செய்து (கருக்காமல் இருக்க) சிறிது மோர் கலந்த நீரில்
சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப்போடவும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து வாழைத்தண்டை பிழிந்து அரை கப் தண்ணீர் உப்பு,பெருங்காயம்
சேர்த்து வேகவைக்கவும்.முக்கால் வெந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் வேகவைக்கவும்
கடைசியில் ஒரு கப் மோர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
தண்ணியாக இருந்தால் ஒரு டீஸ்பூன் அரிசிமாவை சிறிது தண்ணீரில் கரைத்து விட்டு கொதிக்கவிடவும்.

தேங்காயெண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.

Monday, January 12, 2015

பொங்கலோ பொங்கல்.....

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்







வெண்பொங்கல்


தேவையானவை:


பச்சரிசி 2 கப்

பயற்றம்பருப்பு 1/2 கப்

மிளகு 15

சீரகம் 1 டேபிள்ஸ்பூன்

இஞ்சி 1 துண்டு

முந்திரிபருப்பு 10

நெய் 1/4 கப்

தண்ணீர் 10 கப்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

கருவேப்பிலை ஒரு கொத்து

உப்பு தேவையானது



செய்முறை:








அரிசியையும் பருப்பையும் தனித்தனியாக வாணலியில் எண்ணைய்விடாமல் வறுக்கவும்.(ஒரு புரட்டுபுரட்டினால் போதும்.)

ஒரு அகண்ட அடி கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 10 கப் தண்ணீர் விடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அரிசியையுன் பருப்பையும் நன்றாக களைந்து போட்டு கிளறவும்.பொங்காமல் இருக்க low flame ல் வைத்து க் கிளறவும்.அரிசி ,பருப்பு இரண்டும் நன்றாக வெந்தவுடன் உப்பு போடவேண்டும்.(அரிசி,பருப்பு இரண்டும் குழையாமல் உப்பு போடக்கூடாது.)



மிளகு,சீரகம் இரண்டையும் ஒன்று இரண்டுமாக mixy ல் பொடிபண்ணி சிறிது நெய்யில் பொரித்து சேர்க்கவும்.

இஞ்சியை தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கி போடவும்.

பெருங்காயத்தூள்,கருவேப்பிலை இரண்டையும் நெய்யில் பொரித்து போடவும்.முந்திரிப்பருப்பை நெய்யில் பொரித்துப்போடவும்.

கடைசியில் மீதமுள்ள நெய்யை உருக்கி ஊற்றி நன்றாக கிளறி இறக்கவும்.



(அரிசி பருப்பு இரண்டையும் குறிப்பிட்ட அளவு தண்ணீருடன் குக்கரில் வைக்கலாம்.ஆறு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.அப்பொழுதுதான் நன்றாக குழைவாக இருக்கும்

குக்கரை திறந்தவுடன் உப்பு சேர்த்து மற்றவைகளையும் சேர்த்து கிளறவேண்டும்..)
-----------------------------------------------


சர்க்கரை பொங்கல்


தேவையானவை:

பச்சரிசி 1 கப்

பயற்றம்பருப்பு 1/4 கப்

பொடித்தவெல்லம் 1 1/2 கப்

தண்ணீர் 4 1/2 கப்

நெய் 1/4 கப்

பால் 1/2 கப்

ஜாதிக்காய் 1 துண்டு

குங்குமப்பூ 1 டீஸ்பூன்

ஏலக்காய் 4

முந்திரிபருப்பு 10

உலர்ந்த திரட்சை 10

கேசரிப்பவுடர் 1டீஸ்பூன்



செய்முறை:



ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு பயற்றம்பருப்பை எண்ணைய் விடாமல் பொன்னிறமாக வறுக்கவும்.

வெல்லத்தை அரை கப் தண்ணீரில் அடுப்பில் வைத்து கரையவிட்டு வடிகட்டவும்.

பயற்றம்பருப்பை அரிசியுடன் சேர்த்து நன்றாக களைந்து கொள்ளவும்.

ஒரு அகண்ட கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 4 1/2 கப் தண்ணீர் விட்டு,தண்ணீர் நன்கு கொதித்தவுடன் களைந்துவைத்திருந்த அரிசி,பருப்பைப்போட்டு அடிபிடிக்காமல் நன்கு கிளறவும்.அரிசியும் பருப்பும் நன்றாக சேர்ந்து வெந்தவுடன் வடிகட்டிய வெல்லத்தைப்போட்டு medium flame ல் ஒரு பத்து நிமிடம் வைத்து கிளறவும்.

ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்துக்கொண்டு அதில் கேசரிப்பவுடர்,குங்குமப்பூ,ஏலக்காய் இவற்றைப்போடவும்.ஜாதிக்காய் துண்டை நெய்யில் வறுத்து பொடிசெய்து அதையும் பாலில் சேர்த்து கரைத்து பொங்கலில் சேர்க்கவும் மீதமுள்ள பாலையும் பொங்கலில் சேர்க்கவும்.திராட்சை,முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.மீதியுள்ள நெய்யை உருக்கி பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
----------------------------------------


வரகரிசி  சர்க்கரை பொங்கல்
தேவையானவை:

வரகரிசி 1 கப்
தண்ணீர் 3 கப்
பொடித்த வெல்லம் 1 கப்
நெய்  1/4 கப்
முந்திரிபருப்பு 10
 ஜாதிக்காய்1 துண்டு
குங்குமப்பூ 1/4 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
பால் 1 மேசைக்கரண்டி
--------
செய்முறை:


ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு  வரகரிசியை சிறிது நெய் சேர்த்து வறுக்கவும்.

வெல்லத்தை அரை கப் தண்ணீரில் அடுப்பில் வைத்து கரையவிட்டு வடிகட்டவும்.

ஒரு அகண்ட கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 3 கப் தண்ணீர் விட்டு,தண்ணீர் நன்கு கொதித்தவுடன்    வறுத்த வரகசரிசியைப்போட்டு அடிபிடிக்காமல் நன்கு கிளறவும்.அரிசி நன்றாக  வெந்தவுடன் வடிகட்டிய வெல்லத்தைப்போட்டு medium flame ல் ஒரு பத்து நிமிடம் வைத்து கிளறவும். (வரகரிசி வேகுவத்ற்கு பத்து நிமிடம் ஆகும்).

ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்துக்கொண்டு அதில் ,குங்குமப்பூ,ஏலக்காய் இவற்றைப்போடவும்.ஜாதிக்காய் துண்டை நெய்யில் வறுத்து பொடிசெய்து அதையும் பாலில் சேர்த்து கரைத்து பொங்கலில் சேர்க்கவும். முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.மீதியுள்ள நெய்யை உருக்கி பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...