Monday, December 26, 2011

இட்லி கார கறி




தேவையானவை:

இட்லி துண்டுகள் 20
எண்ணைய்  தேவையானது
---------
அரைக்க:
தேங்காய் துருவல் 1கப்
தனியா 1 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 3
---------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை  சிறிதளவு
----------
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ளவைகளை வறுத்து சிறிது  தண்ணீர் விட்டு விழுதுபோல அரைத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட தட்டை எடுத்துக்கொண்டு அதில் இட்லி துண்டுகள்,அரைத்த விழுது,சிறிது எண்ணைய் மூன்றையும் சேர்த்து நன்கு பிசிறவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பிசறி வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்த்து பிரட்டவும்.
சிறிது எண்ணெய் சேர்த்து பொன்னிறமாக வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

சாதாரண இட்லி சாப்பிடுவதை விட இதை ஒரு ஸ்நாக்காக நினைத்து குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Thursday, December 22, 2011

கல்கியில் என் சமையல் குறிப்பு




கல்கியில் வெளியான "பாரம்பரிய சமையல்" மெகா போட்டியில் எனது "குடலை இட்லி " என்ற சமையல் குறிப்பு

தேர்ந்தெடுக்க பட்டுள்ளது என்பதை மகிழச்சியுடன் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி.

Sunday, December 18, 2011

வடைகள்......பலவிதம்

                    மசால் வடை


1.உளுந்து வடை
தேவையானவை:
உளுத்தம்பருப்பு 1 கப்
இஞ்சி  1 துண்டு
பச்சைமிளகாய் 2
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2  தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
உப்பு,எண்ணய் தேவையானது
-----
செய்முறை:
உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி நைசாக அரைக்கவும்.இத்துடன் மிளகு,சீரகம் இரண்டையும் பொடித்து போடவும்.இஞ்சி,பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிப் போடவும்.தேவையான உப்பு,பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கலக்கவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து காய்ந்ததும் மாவை வடை மாதிரி தட்டி நடுவில் ஓட்டையிட்டு எண்ணையில் போட்டு இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
-------------------------------------------
2. தயிர் வடை

தேவையானவை:
உளுந்து வடை 10
கெட்டி தயிர் 2 கப்
பச்சைமிளகாய் 4
சின்னவெங்காயம் 6
இஞ்சி 1 துண்டு
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை  சிறிதளவு
கொத்தமல்லித்தழை   சிறிதளவு
உப்பு,எண்ணைய் தேவையானது
----
செய்முறை:
தயிரை உப்பு சேர்த்து கடைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்,வெங்காயம்,இஞ்சி மூன்றையும் வதக்கி தயிரில் சேர்க்கவும்.
பின்னர் ரெடியாக உள்ள உளுந்து வடைகளை சேர்த்து ஊறவைக்கவும்.
-------------------------------------------
3.அரிசி துவரம் வடை

தேவையானவை:
புழுங்கலரிசி 1 கப்
துவரம்பருப்பு 1/4 கப்
வெங்காயம் 1
தனியா 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
இஞ்சி 1 துண்டு
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணைய்   தேவையானது
-------
செய்முறை:
அரிசி பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
பின்னர் வடிகட்டி இதனுடன் தனியா,மிளகாய் வற்றல்,இஞ்சி தேவையான உப்புசேர்த்து ரவை பதத்துக்கு அரைத்து கடைசியில் வெங்காயத்தை சேர்த்து ஒரு சுற்று சுற்றி கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை சேர்த்து வடை தட்ட வேண்டும்.
---------------------------------------------
4.ஆம வடை

தேவையானவை:
கடலைப்பருப்பு1 கப்
சோம்பு 1 தேக்கரண்டி
வெங்காயம் 1
பச்சைமிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை  சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
------
செய்முறை:
கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.பின்னர் வடிகட்டி அதனுடன் சோம்பு சேர்த்து கெட்டியாக தண்ணீர் தெளித்து அரைக்கவேண்டும்.
அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி,கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை எல்லாம் சேர்த்து வடை தட்டவேண்டும்.
-------------------------------------------------
5. மசால் வடை

தேவையானவை:
கடலைப்பருப்பு 1 கப்
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
பச்சரிசி 1 மேசைக்கரண்டி
சீரகம் அல்லது சோம்பு 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 5
மிளகாய் வற்றல் 3
பெருங்காயம் 1 துண்டு
கறிவேப்பிலைசிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-----------
செய்முறை:
கடலைப் பருப்பு,உளுத்தம்பருப்பு,பச்சரிசி மூன்றையும் ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்
வடிகட்டி இதனுடன் மிளகாய் வற்றல்.பெருங்காயம் சேர்த்து அரைக்கவேண்டும்.
அரைத்த மாவில் தேவையான உப்பு,நறுக்கிய வெங்காயம்,சோம்பு,கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து வடைகளாக தட்ட வேண்டும்.
--------------------------------------------------
6. தேங்காய் வடை

தேவையானவை:
புழுங்கலரிசி 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,பாசிப்பருப்பு ஒவ்வொன்றும் 2 மேசைக்கரண்டிகள்
பச்சைமிளகாய்2
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
செய்முறை:
அரிசி,உளுத்தம்பருப்பை தனியாக ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
கடலை பருப்பு,பாசிப்பருப்பு இரண்டையும் தனியாக ஊறவைக்கவேண்டும்.
------
அரிசி,உளுத்தம்பருப்புடன் தேங்காய் துருவல்,பச்சைமிளகாய் உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
அதனுடன் பாசிபருப்பு,கடலைபருப்பு இரண்டையும்சேர்த்து ஒரு சுற்று சுற்றவேண்டும்.
அரைத்த மாவில் கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை சேர்த்து உளுந்து வடை மாதிரி நடுவில் ஓட்டையிட்டு எண்ணையில் போட்டு எடுக்கவேண்டும்.
------------------------------------------------------------
7. வாழைத்தண்டு வடை

தேவையானவை:
வாழைத்தண்டு 1
பச்சைமிளகாய்3
பொட்டுக்கடலை மாவு 1 மேசைக்கரண்டி
வெங்காயம் 1
கொத்தமல்லித்தழை சிறிதளவு
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
----------
செய்முறை:
வாழைத்தண்டை பொடியாக நறுக்கி மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவேண்டும்.
ஆறினவுடன் மிக்சியில் கரகரவென்று அரைக்கவும்.
அதனுடன் நறுக்கிய பச்சைமிளகாய்,வெங்காயம் பொட்டுக்கடலை மாவு,,கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து நன்றாக பிசறி சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவேண்டும்..
----------------------------------------
8. பொட்டுக்கடலை வடை

தேவையானவை:
பொட்டுக்கடலை 1 கப்
நிலக்கடலை 1/2 கப்
மிளகுத்தூள் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
------
செய்முறை:
பொட்டுக்கடலையையும்,நிலக்கடலையையும் லேசாக வறுத்து கரகரவென்று பொடித்துக்கொள்ளவும்.
அதில் மிளகுத்தூள்,உப்பு,கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து வடைகளாக தட்டவும்.
---------------------------------------------
9.முட்டைக்கோஸ் வடை

தேவையானவை:
துருவிய முட்டைக்கோஸ் 2 கப்
பயத்தம்பருப்பு 1 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
வெங்காயம் 1
சீரகம் 1தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
--------
செய்முறை:
பயத்தம்பருப்பையும் கடலைப்பருப்பையும் தனித்தனியாக ஊறவைக்கவேண்டும்.
பயத்தம்பருப்பை மிருதுவாகவும் கடலைபருப்பை கரகரவென்றும் அரைக்கவேண்டும்.
முட்டைக்கோஸுடன் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து ஊறவைக்கவேண்டும்.
--------
ஒரு பாத்திரத்தில் அரைத்த இரண்டு மாவையும் சேர்த்து அதில் முட்டைக்கோஸை வடித்து சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கிய் வெங்காயம்,பச்சைமிளகாய்,சீரகம்,கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை,சிறிது உப்பு பிசைந்து (தண்ணீர் விட வேண்டாம்) வடைகளாக தட்டவும்.
முட்டைக்கோஸுக்கு பதிலாக எந்த வகைக் கீரையையும்  சேர்க்கலாம், கீரையை பொடியாக நறுக்கி சேர்த்தால் போதும்.
---------------------------------------------------
10.ஜவ்வரிசி வடை

தேவையானவை:
ஜவ்வரிசி 3/4 கப்
கடலைப்பருப்பு 1 கப்
உருளைக்கிழங்கு 2
வெங்காயம் 1
சோம்பு 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
செய்முறை:
ஜவ்வரிசியையும் கடலைப்பருப்பையும் தனித்தனியே  அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
உருளைக்கிழங்கை தோலுரித்து வேகவைத்து மசித்து வைக்கவேண்டும்.
கடலைப்பருப்பை வடிகட்டி அதனுடன் சோம்பு,உப்பு சேர்த்து அரைக்கவேண்டும்.
அரைத்த மாவில் மசித்த உருளைக்கிழங்கு,வடிகட்டிய ஜவ்வரிசி,நறுக்கிய வெங்காய்ம்,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை எல்லாம் நன்கு கலந்து வடைகளாக தட்டவேண்டும்

Thursday, December 15, 2011

பைன் ஆப்பிள் ரசம்



தேவையானவை:                  பைன் ஆப்பிள்
பைன் ஆப்பிள் 2 பத்தை
துவரம்பருப்பு 1/2 கப்
புளி எலுமிச்சை அளவு
பெருங்காயம் ஒரு துண்டு
உப்பு தேவையானது

அரைக்க:
வற்றல் மிளகாய் 3
தனியா 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
துவரம்பருப்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்

தாளிக்க:
கடுகு,கறிவேப்பிலை,நெய்

செய்முறை:


அரை கப் துவரம்பருப்பை குக்கரில் ஒரு கப் தண்ணீரில் வைத்து மூன்று விசில் வந்தவுடன் இறக்கிவைக்கவும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி அதில் பெருங்காயம்,உப்பு போட்டு கொதிக்கவைக்கவும்.
வற்றல் மிளகாய்,தனியா,மிளகு,கடலைபருப்பு,துவரம்பருப்பு இவற்றை சிறிது எண்ணைய் விட்டு வறுத்து
அரைத்து கடைசியில் சீரகத்தை பச்சையாக வைத்து விழுதுபோல அரைத்து வைக்கவும்.
புளிஜலம் நன்றாக கொதித்தவுடன் அரைத்த விழுதைப்போட்டு சிறிது கொதித்த பின் வேகவைத்த பருப்பைப்போட்டு
கொதிக்கவைக்கவும்.
நன்றாக கொதி வந்தவுடன் pineapple
பத்தையை தோலை எடுத்துவிட்டு mixyல் நன்றாக சிறிது தண்ணீர் விட்டு அரைத்து
வடிகட்டி விடவும்.ஒரு நிமிடம் கழித்து இறக்கவும்.(பைன் ஆப்பிள் சாற்றை விட்டவுடன் ரசம் கொதிக்கவேண்டாம்.)
கடைசியில் வாணலியில் நெய் வைத்து கடுகு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
இந்த ரசத்திற்கு தக்காளி சேர்ப்பதில்லை

Sunday, December 11, 2011

வற்றல்....காரக்குழம்பு




தேவையானவை:
சின்ன வெங்காயம் 10
பூண்டு 5 பல்
சாம்பார் பொடி 1 மேசைக்கரண்டி
புளி 1 எலுமிச்சை அளவு
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு,நல்லெண்ணைய் தேவையானது
------
அரைக்க:
சின்ன வெங்காயம்  5
பூண்டு 3 பல்
தக்காளி 1
சுண்டைக்காய் வற்றல் 5
தேங்காய்             1 துண்டு
-------
பொரிக்க:
மணத்தக்காளி வற்றல் 1 மேசைக்கரண்டி
சுண்டைக்காய் வற்றல் 10
மிதுக்க வற்றல் 10
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
வெந்தயம்  1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் சின்ன வெங்காயம்,பூண்டு,தக்காளி மூன்றையும் எண்ணையில் வதக்கவேண்டும்.
சுண்டைக்காய் வற்றலை எண்ணையில் பொரித்தெடுத்து தேங்காய் துண்டுடன் எல்லாவற்றையும் சேர்த்து விழுது போல அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
-----
அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணைய் சேர்த்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து சின்ன வெங்காயம் பூண்டு இரண்டையும் வதக்கவேண்டும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து சாம்பார் பொடி,பெருங்காயத்தூள்,உப்பு சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
பின்னர் அரைத்த விழுதினை சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
பொரிக்க கொடுத்துள்ள வற்றல்களை எண்ணையில் பொரித்து சேர்க்கவேண்டும்.
(வற்றல்களில் ஏற்கனவே உப்பு இருப்பதால் அரை உப்பு போட்டால் போதும்)
இந்த வற்றல்..காரக்குழம்பு மற்ற வத்தக்குழம்பு /காரக்குழம்பை விட சுவை கூடுதலாக இருக்கும்.
சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.தயிர் சாதத்திற்கும் ஏற்றது.

Wednesday, December 7, 2011

அப்பம் (மூன்று வகை)




அப்பம் 1

தேவையானவை:
பச்சரிசி 1 கப்
வெல்லம் 1/2 கப் (பொடித்தது)\
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
வாழைப்பழம் 1
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி

செய்முறை:
அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
பின்னர் நைசாக அரைக்கவேண்டும்.
அதனுடன் பொடித்த வெல்லத்தையும் வாழைப்பழத்தையும் சேர்த்து அரைக்கவேண்டும்.
இட்லி மாவு பதம் இருக்கவேண்டும். அதனுடன் ஏலக்காய் தூள் சேர்க்கவேண்டும்.
வாணலியில் எண்ணைய் வைத்து நன்கு காய்ந்ததும் அடுப்பை ஸ்லிம்மில் வைத்து ஒரு கரண்டியில் மாவை எடுத்து  ஊற்றி
இருபக்கமும் பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.
---------------------
அப்பம்  2.

தேவையானவை:
மைதா மாவு 1கப்
அரிசிமாவு 1 மேசைக்கரண்டி
வெல்லம் 3/4 கப் (பொடித்தது)
வாழைப்பழம்1
ஏலக்காய் தூள்  1 தேக்கரண்டி

செய்முறை:
வெல்லத்தை ஒரு கரண்டி தண்ணீரில் பத்து நிமிடங்கள் வைக்க கரைந்துவிடும்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மைதாமாவு,அரிசிமாவு,வாழைப்பழம்,ஏலக்காய் தூள் சேர்த்து
தண்ணீர் விடாமல் பிசைய வேண்டும்.
கரைத்த வெல்லத்தை இதனுடன் சேர்த்து பிசைய வேண்டும்.கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மாவு இட்லி மாவு பதம் இருக்கவேண்டும்.
முதல் வகையில் கூறியபடி எண்ணெயில் மாவை ஊற்றி எடுக்கவேண்டும்.

-----------------------------
அப்பம் 3
தேவையானவை:
கோதுமைமாவு 1 கப்
அரிசிமாவு 1 மேசைக்கரண்டி
வெல்லம் 3/4 கப் (பொடித்தது)
வாழைப்பழம்1
ஏலக்காய் தூள்  1 தேக்கரண்டி

செய்முறை:
அப்பம் 2 ல் கூறியபடி மாவை கலந்து (மைதா மாவுக்கு பதில் கோதுமை மாவு) எண்ணெயில் ஊற்றி எடுக்கவேண்டும்.

Monday, December 5, 2011

பட்டர் குல்சா





தேவையானவை:
மைதாமாவு 2 கப்
dry yeast 1 டீஸ்பூன்
சர்க்கரை 1 டீஸ்பூன்
வெண்ணைய் 1/4 கப்
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சிறிது வென்னீர் எடுத்துக்கொண்டு அதில் dry yeast யும் சர்க்கரையையும் சேர்த்து கலக்கவேண்டும்.
பத்து நிமிடம் தனியே வைக்கவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தில் மைதாமாவு,உப்பு.yeast கலவை மூன்றையும் சேர்த்து கை விரல்களால் கிளறி வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து
மாவை தளர பிசைய வேண்டும்.ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணைய் சேர்த்து பிசைந்து இரண்டு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.

பிசைந்த மாவை உருண்டைகளாக்கி சற்று கனமாக இடவேண்டும்.பின்னர் ஒவ்வொன்றாக தவாவில் போட்டு மூடவேண்டும்.
இரண்டு நிமிடம் கழித்து மேலே உப்பி வரும்.வெளியே எடுத்து இருபுறமும் வெண்ணைய் தடவவேண்டும்.

இதற்கு side dish Peas Masala,ஆலூ மட்டர்.

Monday, November 28, 2011

ராகி (கேழ்வரகு) தோசை




தேவையானவை:
ராகி

ராகி மாவு2 கப்
அரிசி மாவு 1 கப்
தயிர் 3/4 கப்
பச்சை மிளகாய் 3
சீரகம் 1 தேக்கரண்டி
வெங்காயம் 2
கொத்தமல்லித்தழை சிறிதளவு
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு,எண்ணைய் தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
பெருங்காய்த்தூள் 1 தேக்கரண்டி
------
செய்முறை:

ராகி மாவு கடைகளில் கிடைக்கும்.இல்லாவிடில் ராகியை வாங்கி காயவைத்து மெஷினில் அரைத்துக்கொள்ளலாம்.
தயிரை நன்கு கடைந்து ராகி மாவு,அரிசிமாவு,தேவையான தண்ணீர்,உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.(ரவை தோசை மாவு பதம்)

கரைத்த மாவில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிப்போடவும்.
சீரகத்தை உள்ளங்கையில் தேய்த்து போடவும்.
பச்சைமிளகாய்,கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கிப் போடவும்.
தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.

அடுப்பில் தோசைகல்லை வைத்து காய்ந்ததும் மாவை கரண்டியால் எடுத்து சுற்றி ஊற்றவும்.
எண்ணையை சுற்றி ஊற்றி நன்கு வெந்ததும் எடுக்கவும்.

ராகி தோசைக்கு தக்காளி சட்னி,பச்சைமிளகாய் சட்னி சிறந்த side dish.

அரிசி கோதுமையை விட ஊட்ட சத்து நிறைந்தது ராகி.
புரதம்,சுண்ணாம்பு,இரும்புச்சத்து.நார்ச்சத்து எல்லாம் நிறைந்தது.

Monday, November 21, 2011

கோவைக்காய் மசாலா


..
தேவையானவை:
 கோவைக்காய் 1/4 கிலோ
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
புளி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
----
அரைக்க:
சின்ன வெங்காயம் 5
மிளகாய் வற்றல் 2
பூண்டு 2 பல்
தேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேபிலைசிறிதளவு
-----
செய்முறை:

கோவக்காயை நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவேண்டும்.
ஒரு microwave bowl ஐ எடுத்துக்கொண்டு அதில் கோவக்காயுடன் சிறிது தண்ணீர் தெளித்து மஞ்சள் தூள்சேர்த்து மொத்தம் 12 நிமிடம் வைக்கவேண்டும்.
நான்கு,நான்கு நிமிடங்களாக வைக்கவேண்டும்.மூன்றாவது தடவை வைக்கும் போது தேவையான உப்பு சேர்த்து வைக்கவேண்டும்.நன்கு வெந்துவிடும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் வதக்கி விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
-------
அடுப்பில் கடாயை வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து கோவக்காயை சேர்த்து வதக்கவேண்டும்.
புளியை கெட்டியாக கரைத்து ஊற்றி அரைத்த விழுதையும் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.தண்ணீர் அதிகம் சேர்க்கவேண்டாம்.
எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
-- கோவைக்காய் மசாலா சப்பாத்தி,பூரிக்கு ஏற்ற side dish. சாதத்தோடும் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.

Friday, November 18, 2011

முடக்கத்தான் கீரை மசியல்

முடக்கத்தான் கீரை 

தேவையானவை:
முடக்கத்தான் கீரை 2 கப்
பயத்தம்பருப்பு 1/4 கப்
சின்ன வெங்காயம் 5
கடலை  மாவு 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணைய் தேவையானது
--------
அரைக்க:
தேங்காய் துருவல் 1/4 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
------
செய்முறை:

முடக்கத்தான் கீரையை நன்கு அரிந்து அலசிக்கொள்ளவும்.
ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் முதலில் பயத்தம்பருப்பை அரை கப் தண்ணீருடன் சேர்த்து அதன் மேல் அரிந்த முடக்கத்தான் கீரையை தேவையான உப்புடன் சேர்க்கவும்.
மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
குக்கரில் இருந்து எடுத்த கீரையை இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை விழுது போல் அரைத்து கீரையுடன் சேர்க்கவும்.
கடலை மாவை சிறிது தண்ணீருடன் கரைத்து சேர்த்து சிறிது கொதிக்கவிடவும்.
கடைசியில் கடுகு,உளுத்தம்பருப்பு,மிளகாய் வற்றல் தாளிக்கவும்.
முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு சிறந்தது.

Sunday, November 13, 2011

குடமிளகாய்..வெங்காயம்..பொரியல்




தேவையானவை:
பச்சை குடமிளகாய் 1
சிவப்பு குடமிளகாய் 1
மஞ்சள் குடமிளகாய் 1
வெங்காயம் 2
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
பயத்தம் பருப்பு 1 மேசைக்கரண்டி
------
அரைக்க:
தேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் 2
பொட்டுக்கடலை 1 மேசைக்க்கரண்டி
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு1 தேக்கரண்டி
கறிவேப்பிலை  சிறிதளவு.
--------
செய்முறை:

மூன்று பச்சைமிளகாய்களையும்,வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பயத்தம்பருப்பை பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் சேர்த்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
ஊறவைத்துள்ள பயத்தம்பருப்பை வடிகட்டி இதனுடன் சேர்த்து பிரட்டவும்..
பின்னர் நறுக்கி வைத்துள்ள மூன்று குடமிளகாய்களையும் தேவையான உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
குடமிளகாய் எல்லாம் நன்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய்,பொட்டுக்கடலை பொடியை தூவி கிளற சுவையான குடமிளகாய்..வெங்காயம்...பொரியல் ரெடி.
பார்க்க கலர்ஃபுல்லாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Thursday, November 10, 2011

கறிவேப்பிலை பொடி




தேவையானவை:
கறிவேப்பிலை 1 கப் (ஆய்ந்தது)
மிளகாய்வற்றல் 4
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
கடலைபருப்பு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
புளி சி றி தளவு
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து ஆய்ந்து வைத்துள்ள கறிவேப்பிலையை போட்டு எண்ணைய் விடாமல் ஒரு பிரட்ட வேண்டும்.
ஈரமெல்லாம் போனவுடன் தனியே எடுத்து வைக்கவேண்டும்.
வாணலியில் சிறிது எண்ணைய் வைத்து மிளகாய் வற்றலை தனியே வறுத்து எடுக்கவேண்டும்.
அதே வாணலியில் கடலை பருப்பு,உளுத்தம்பருப்பு இரண்டையும் பொன்னிறமாக வறுக்கவேண்டும்.
பெருங்காயத்தை தனியே பொரித்து எடுக்கவேண்டும்
 கடைசியில் புளியையும் உப்பையும் ஒரு பிரட்டு பிரட்ட வேண்டும்.

மிக்சியில் முதலில் பருப்புகளையும்,மிளகாய்வற்றல், பெருங்காயம் புளி உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி விட்டு கறிவேப்பிலையை சேர்த்து
பொடியாக அரைக்கவேண்டும்.
கறிவேப்பிலை பொடியை சாதத்தோடு சிறிது நல்லெண்ணைய் சேர்த்து சாப்பிடலாம்.
தயிர் சாதத்திற்கு ஊறுகாய்க்கு பதில் தொட்டுக்கொள்ளலாம்.

Monday, November 7, 2011

பாலக்....காராமணி....STEW.




தேவையானவை:
காராமணி 1/2 கப்
பாலக்கீரை 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பட்டை 1 துண்டு
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகுதூள் 1 தேக்கரண்டி
வெங்காயம் 1
தக்காளி 1
தேங்காய் பால் 1/2 கப்
வெங்காயம் 1
தக்காளி 1
உலர்ந்த திராட்சை 5
உப்பு,எண்ணைய் தேவையானது
--------
அரைக்க:
பூண்டு 4 பற்கள்
குங்குமப்பூ 1/2 தேக்கரண்டி 
------
செய்முறை:
காராமணியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும்.
பாலக் கீரையை பொடியாக நறுக்கி சிறிது தண்ணீர் தெளித்து Microwave 'H'" ல் இரண்டு நிமிடம் வைத்து எடுத்து வைக்கவும்.
அரைக்கக்கொடுத்துள்ள பூண்டு,குங்குமப்பூ இரண்டையும் சிறிது உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி எண்ணையில் வதக்கி விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
-----------
ஒரு கடாயை அடுப்பில் வைத்து பட்டை, சீரகம்,மிளகுதூள் வதக்கி காராமணி,பாலக்கீரை.பூண்டு குங்குமப்பூ விழுது,வெங்காயம் தக்காளி விழுது,சிறிது உப்பு எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.திராட்சையை சேர்க்கவும். பின்னர் தேங்காய் பால் சேர்த்து சிறிது கொதித்தவுடன் இறக்கவும்.

Monday, October 31, 2011

கண்டத்திப்பிலி ரசம்


கண்டத்திப்பிலி

தேவையானவை:
கண்டத்திப்பிலி3
அரிசிதிப்பிலி 1
மிளகாய் வற்றல் 2
தனியா 1 தேக்கரண்டி
மிளகு 5
கடலைப்பருப்பு 1/2 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
புளி எலுமிச்சை அளவு
பூண்டு 4 பற்கள்
நெய் 1 தேக்கரண்டி
---------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
-------
செய்முறை:

கண்டத்திப்பிலி,அரிசிதிப்பிலி,மிளகாய் வற்றல்.தனியா,மிளகு,கடலைப்பருப்பு எல்லாவற்றையும் வறுத்து சிறிது தண்ணீர் சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
சீரகத்தை சிறிது தண்ணீர் சேர்த்து பச்சையாக அரைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து விடவும்.
அதனுடன் அரைத்து வைத்துள்ள கண்டத்திப்பிலி விழுது,சீரக விழுது தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
பூண்டு பற்களை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
ரசம் நன்கு கொதித்தவுடன் கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
இந்த ரசம் உடல் வலியை போக்கும்.

Sunday, October 23, 2011

ரிப்பன் தேன்குழல்



தேவையானவை:

கடலைமாவு 2 கப்
அரிசிமாவு 1 கப்
காரப்பொடி 1 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் 1 தேக்கரண்டி
பெருங்காயம் 1 தேக்கரண்டி
 வெண்ணைய் 1/4 கப்
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கடலைமாவு,அரிசிமாவு இரண்டையும் சேர்த்து கலக்கவேண்டும்.
உப்பையும் பெருங்காயத்தையும் சிறிது தண்ணீரில் கரைத்து மாவில் விடவேண்டும்.
அதனுடன் காரப்பொடி,மிளகு தூள்,வெண்ணைய் எல்லாவற்றையும் தேவையான தண்ணீருடன் சேர்த்து கெட்டியாக பிசையவேண்டும்.

வாணலியில் எண்ணைய் வைத்து காய்ந்த பின் தேன்குழல் படியில் நாடா வில்லையைப்போட்டு,சிறிது மாவை அதில் சேர்த்து எண்ணையில் பிழியவும்.
இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

Friday, October 21, 2011

பாதாம் அல்வா



தேவையானவை:

பாதாம் பருப்பு 1 கப் (அரைத்த விழுது) 

சர்க்கரை1 1/2 கப்
நெய் 1 கப்
குங்குமப்பூ சிறிது (optional)
ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
Lemon yellow colour 1/2 டீஸ்பூன்

செய்முறை:




பாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் போட்டு அரைமணிநேரம் மூடிவைக்கவேண்டும்.பின்னர் அதனை எடுத்து தோலுரித்து சிறிது தண்ணீருடன் மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

அடுப்பில் சற்று அடி கனமான பாத்திரத்தை வைத்து பாதாம் விழுதுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவேண்டும்.உருட்டுகிற பதம் வருகிறவரை கிளறவேண்டும்.பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு பாதாம் பருப்பு விழுது,சர்க்கரை கலவையில் நெய் சேர்த்து கிளறவேண்டும்.(அடுப்பு எரியும்போதே நெய் ஊற்றி கிளறினால் அல்வாவின் நிறம் மாறிவிடும்)அல்வாவானது பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.

அல்வாவில் ஏலப்பொடி,குங்குமப்பூ,lemon colour சேர்க்கவண்டும்

Thursday, October 20, 2011

கர்நாடகா போண்டா




தேவையானவை:
மைதாமாவு 2 கப்
 கடலைமாவு 2 மேசைக்கரண்டி
அரிசிமாவு 2 மேசைக்கரண்டி
உளுந்து மாவு 1 மேசைக்கரண்டி
தயிர் 1 கப்
----------
பச்சைமிளகாய் 2
தேங்காய் 1 துண்டு
இஞ்சி 1 துண்டு
கறிவேப்பிலை சிறிதளவு
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணைய் தேவையானது
--------
செய்முறை:

மைதாமாவு,கடலைமாவு,அரிசிமாவு,உளுந்துமாவு நான்கினையும் தேவையான உப்பு சேர்த்து ஒன்றாகக்கலந்து தயிரை ஊற்றி பிசையவேண்டும்.
தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்..
பச்சைமிளகாய்,இஞ்சி,தேங்காய் மூன்றையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மாவில் கலக்கவும் பொடியாக அரிந்த .கறிவேப்பிலை,பெருங்காயத்தூள் சேர்த்து
ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
வாணலியில் எண்ணைய் வைத்து மிதமான சூட்டில் மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துப்போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.
தேங்காய் சட்னி இதற்கு பொருத்தமான side dish..  

Monday, October 17, 2011

பொன்னாங்கண்ணிக்கீரை மசியல்




தேவையானவை:
பொன்னாங்கண்ணிக்கீரை அரிந்தது 2 கப்
துவரம்பருப்பு அல்லது
பயத்தம்பருப்பு 1/2 கப்
காராமணி பருப்பு 1 மேசைக்கரண்டி
முழுப்பயறு1 மேசைக்கரண்டி
flax seeds                            1 தேக்கரண்டி
--------
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
தனியா பவுடர் 1 தேக்கரண்டி
சீரகத்தூள் 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் 1 தேக்கரண்டி
வறுத்த தேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி
--------
உப்பு,எண்ணைய் தேவையானது
-------
தாளிக்க:
கடுகு1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
மிளகாய் வற்றல் 2
--------
செய்முறை:

ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிந்தபொன்னாங்க்கண்ணிக்கீரை,பயத்தம்பருப்பு,காராமணி பருப்பு,flax seeds எல்லாவற்றையும் சிறிது உப்பு,தண்ணீருடன் (1/2 கப்)
சேர்த்து அப்படியே குக்கரில் மூன்று விசில் வரும்வரை வைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து குக்கரில் இருந்து எடுத்த கீரைக்கலவையை நன்றாக மத்தில் மசித்து சேர்க்கவும்.
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது,தனியா பவுடர்,சீரகத்தூள்,மிளகுத்தூள்,தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கொதித்தவுடன் இறக்கவும்.
மசியல் தண்ணியாக இருந்தால் ஒரு தேக்கரண்டி கடலை மாவு அல்லது கார்ன் மாவு தண்ணீரில் கரைத்து சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கலாம்.
இந்தக்கீரை கண்ணுக்கு மிகவும் நல்லது.உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

Thursday, October 13, 2011

புடலங்காய் உசிலி





 தேவையானவை:

 புடலங்காய் 2 கப் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள்தூள்  1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1/2 கப்
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்

மிளகாய் வற்றல் 4

பெருங்காயம் 1 துண்டு

மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது
---
தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு .கறிவேப்பிலை மூன்றும்சிறிதளவு

செய்முறை:

புடலங்காயை பொடியாக நறுக்கிக்கொண்டு உப்பு மஞ்சள்தூள் சேர்த்து பிசறி பத்து நிமிடம் ஊறவைக்கவும்.

துவரம்பருப்பு,கடலைபருப்பு,மிளகாய்வற்றல்,பெருங்காயம் நான்கையும் ஒரு மணிநேரம் தண்ணீரில்

ஊறவைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 15 நிமிடம் வேகவைக்கவும்.

ஆவியில் வேகவைத்த பருப்புகளை நன்கு உதிர்க்கவும்.(மிக்சியில் ஒரு சுற்று சுற்றினால் உதிரியாக வரும்)

வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு .கறிவேப்பிலை  தாளித்து

ஊறவைத்த புடலங்காய் துண்டுகளை நன்றாக பிழிந்து எடுத்து சேர்த்து வதக்கவும்..
 புடலங்காய் நன்கு வதங்கினவுடன் உதிர்த்த பருப்புகளை சேர்த்து சிறிது எண்ணைய் விட்டு நன்றாக கிளறவும்.
உதிரி உதிரியாக வரும்.கடைசியில் தேங்காய் துருவலை சிறிது வறுத்து சேர்க்கவேண்டும்.

Sunday, October 9, 2011

காளன்



தேவையானவை:
சேனைக்கிழங் கு      1 கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது)
துருவிய தேங்காய் 3/4 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
வெந்தயம் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
மிளகுதூள் 1 தேக்கரண்டி
நெய் 1 தேக்கரண்டி
தயிர் 1 கப்
உப்பு தேவையானது
------------
தாளிக்க:
தேங்காய் எண்ணைய் 1 மேசைக்கரண்டி
கடுகு1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் 2
பச்சைமிளகாய்2
கறிவேப்பிலை சிறிதளவு
--------
செய்முறை:
தேங்காய் துருவல் சீரகம் இரண்டையும் சிறிது தண்ணீர் தெளித்துவிழுது போல அரைத்துக்கொள்ளவும்.
வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
-----------
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரை கப் தண்ணீர் விட்டு ஒரு தேக்கரண்டி மிளகு தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவைக்கவேண்டும்.
பின்னர் வடிகட்டி அந்த தண்ணீரை மீண்டும் பாத்திரத்தில் வைத்து அதனுடன் நறுக்கிய சேனைக்கிழங்கு துண்டுகள் .மஞ்சள் தூள்,தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
சேனைக்கிழங்கு சிறிது வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் துருவல்,சீரக விழுதையும்,வெந்தய விழுதையும் நெய்யுடன் சேர்த்து சிறிது கொதிக்கவிடவும்.
பின்னர் தயிர் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவேண்டும்.(தயிர் சேர்த்த பின் கொதிக்கவைக்கக்கூடாது)
வாணலியில் தேங்காயெண்ணைய் வைத்து கடுகு,கிள்ளிய சிவப்பு மிளகாய்,குறுக்காக வெட்டிய பச்சைமிளகாய்,கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.

Monday, October 3, 2011

கறுப்பு உளுந்து சுண்டல்




தேவையானவை:
கறுப்பு உளுந்து  2 கப்
தேங்காய் துருவல்  1/2 கப்
இஞ்சி              1 துண்டு
பச்சைமிளகாய்      3
சீரகம்              1 தேக்கரண்டி
உப்பு,எண்ணைய் தேவையானது
-------
தாளிக்க:
கடுகு          1 தேக்கரண்டி
கறிவேப்பிலை  சிறிதளவு
------
செய்முறை:
 கறுப்பு உளுந்தை இரவே ஊறவைத்து மறு நாள் குக்கரில் வைத்து மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவேண்டும்.
தேங்காய் துருவல்,இஞ்சி,பச்சைமிளகாய்,சீரகம் நான்கினையும் தண்ணீர் விடாமல் பொடி போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
--------
அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து குக்கரில் இருந்து எடுத்த கறுப்பு உளுந்தை வடிகட்டி தேவையான உப்புடன்
சேர்க்கவேண்டும்.அதனுடன் அரைத்த பொடியையும் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.

கறுப்பு உளுந்து  இடுப்புக்கு பலம் கொடுக்கும்.

Sunday, September 25, 2011

வெள்ளரி விதை பாயசம்




தேவையானவை:
வெள்ளரி விதை       1/2 கப்
பாதாம்பருப்பு          10
பால்                  2 கப்
வெல்லம் பொடித்தது  1 கப்
முந்திரிபருப்பு         10
திராட்சை             10
குங்குமப்பூ            ஒரு சிட்டிகை
ஏலப்பொடி            1/2 தேக்கரண்டி
நெய்                  1 தேக்கரண்டி 

செய்முறை:

வெள்ளரி விதையையும் பாதாம்பருப்பையும் ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து சிறிது பால் சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்தவுடன் பொடித்த வெல்லம் சேர்க்கவும்.
வெல்லம் கரைந்ததும் பாலை விட்டு கொதிக்கவிடவும்.
முந்திரியையும் திராட்சையையும் நெய்யில் வறுத்துப் போடவும்.
ஏலத்தூள் சேர்க்கவும்.
குங்குமப்பூவை பாலில் கலந்து சேர்க்கவும்.
வெள்ளரி விதை பாயசம் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.

Monday, September 19, 2011

நவராத்திரியும் நைவேத்தியமும்




நவராத்திரி புரட்டாசி மாசம் மாளய அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் பூஜிக்கும் வழக்கம் உண்டு.தேவியின் பெருமைகளை ஒன்பது நாட்களும் சொல்லி வழிபடுவார்கள்.ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நைவேத்தியம் செய்வார்கள்.ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு நைவேத்தியம் விசேஷம்.அதைச்சொல்வதே இந்த பதிவு.
-----------
ஞாயிற்றுக்கிழமை: கோதுமை

கோதுமை அப்பம்:

ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் வைத்து 3/4 கப் பொடித்த வெல்லத்தை கரைத்துக்கொள்ளவும்.
அதில் கோதுமை மாவு 1 கப்,ரவை 1 மேசைக்கரண்டி,மைதா 1 மேசைக்கரண்டி சேர்த்து கரைக்கவும்.
ஏலப்பொடி,தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கரைத்து சிறு சிறு அப்பங்களாக எண்ணையில் பொரித்து எடுக்கவேண்டும்.
----------------------------
திங்கட்கிழமை: பாசிப்பயறு (பயத்தம்பருப்பு)

பாசிப்பயறு சுண்டல்:

ஒரு கப் பாசிப்பயற்றை கொஞ்சம் தண்ணீர் விட்டு வேகவைக்கவேண்டும்.நன்றாக வெந்ததும் வடிகட்டவேண்டும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணைய் வைத்து கடுகு பெருங்காயத்தூள் தாளித்து வடிகட்டிய பாசிப்பயற்றை தேவையான உப்புடன் சேர்த்து கிளறவேண்டும்.
கடைசியில் தேங்காய் துருவல்,இஞ்சி துருவல்,கறிவேப்பிலை சேர்த்து இறக்கவேண்டும்.
----------------------------
செவ்வாய் கிழமை: துவரம்பருப்பு:

துவரம்பருப்பு குணுக்கு:

துவரம்பருப்பு 1 கப்,கடலைபருப்பு 1/4 கப்,உளுத்தம்பருப்பு 1/4 கப்,புழுங்கலரிசி 1 மேசைக்கரண்டி .மிளகாய் வற்றல் 4, இவற்றை 2 மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
இதனுடன் தேவையான உப்பு,சிறிது பெருங்காயம் சேர்த்து அரைக்கவேண்டும்.அரைத்த மாவில் கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி கலந்து கறிவேப்பிலை சேர்த்து
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவேண்டும்.
-----------------------

புதன் கிழமை: காராமணி

காராமணி சுண்டல்

ஒரு கப் காராமணியை மூன்று மணி நேரம் ஊறவைத்து ஒரு தேக்கரண்டி சர்க்கரை,சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவேண்டும்.
பின்னர் வடிகட்டி வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,கறிவேப்பிலை,பெருங்காயத்தூள் தாளித்து வடிகட்டிய காராமணியை சேர்த்து வதக்கவேண்டும்.
சீரகம்,மிளகு,தனியா ஒவ்வொன்றும் ஒரு தேக்கரண்டி எடுத்து வறுத்து பொடி பண்ணி சேர்க்கவேண்டும்.
கடைசியில் தேங்காய் துருவல் சேர்க்கவும்.
-------------------------
வியாழக்கிழமை: கொண்டக்கடலை :

கொண்டக்கடலை சுண்டல்:

ஒரு கப் கொண்டக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்கவேண்டும்.
மறு நாள் குக்கரில் உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வைக்கவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,கறிவேப்பிலை,பெருங்காயத்தூள்,இரண்டு வற்றல் மிளகாய் தாளித்து வடிகட்டிய கொண்டக்கடலையை சேர்த்து வதக்கவும்.
தேங்காயை சிறு சிறு துண்டங்களாக நறுக்கி சேர்க்கலாம்.
வேண்டுமென்றால் இஞ்சியைத் துருவி போடலாம்.
-------------------------
வெள்ளிக்கிழமை: புட்டு:

பச்சரிசியை மிஷினில் நைசாக மாவாக அரைத்துக்கொள்ளவேண்டும்.வாணலியில் இந்த மாவை எண்ணைய் விடாமல் சிவப்பாக வறுத்துக்கொள்ளவேண்டும்.
ஆறிய பின் மாவை சலித்து ஒரு பெரிய தட்டில் கொட்டி மிதமான வென்னீர் விட்டு பிசையவேண்டும். (உதிர்த்தால் உதிராக இருக்கும்படி பிசையவேண்டும்)
இந்த மாவை இட்லி தட்டில் ஆவியில் 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீர் சிறிது விட்டு (ஒரு கப் மாவிற்கு ஒரு கப் பொடித்த வெல்லம்) துருவிய வெல்லம் சேர்த்து உருண்டைப்பாகு வந்தவுடன்
ஆவியில் வைத்த மாவை சேர்த்து கிளறவும்.
வாணலியில் 1/4 கப் நெய் வைத்து காய்ந்ததும் புட்டு மாவுடன் ஏலப்பொடி சேர்த்து ஒரு கிளறு கிளற வேண்டும்.
தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் போடவும்.
முந்திரிபருப்பை வறுத்துப் போடவும்.
---------------------
சனிக்கிழமை: எள்

எள் பர்ஃபி:

எள்ளை நீர் விட்டு நன்றாக களைந்துவிட்டு வடிகட்டி வெறும் வாணலியில் போட்டு வெடிக்கும் வரை வறுக்கவேண்டும்.
வறுத்த எள் ஒரு கப், வறுத்த வேர்க்கடலை ஒரு கப் இரண்டையும் 'நற நற' என்று பொடி பண்ண வேண்டும்.
வாணலியில் சிறிது தண்ணீர் வைத்து (ஒரு கப் பொடி பண்ணிய கலவைக்கு ஒரு கப் பொடித்த வெல்லம்) பொடித்த வெல்லம் ஏலத்தூள் சேர்த்து
கம்பிப்பாகு வந்ததும் பொடி பண்ணியதைப் போட்டு நன்கு கிளறி ஒரு தட்டில் நெய்யை பரவலாகத் தடவி கிளறியதைக் கொட்டி வில்லைகளாக போடலாம்.

Sunday, September 11, 2011

உருளைக்கிழங்கு பொடிமாஸ்




தேவையானவை:
உருளைக்கிழங்கு 5
வெங்காயம் 2  
தேங்காய் துருவல் 1/4 கப்
பச்சைமிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
தேங்காய் எண்ணைய் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
மிளகாய்தூள் 1 தேக்கரண்டி
எலுமிச்ச ஜூஸ் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணைய் தேவையானது
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
---
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.(உருளையை வேகவைக்கும்பொழுது இஞ்சித்துண்டை அதனுடன் சேர்த்து வேகவைக்கவும்.வாயு தொந்தரவு இருக்காது)
 வெங்காயம்,பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
தேங்காய் துருவலை தேங்காயெண்ணையில் வறுத்துக்கொள்ளவும்.
-----
அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய் இரண்டையும் வதக்கவும்.
பின்னர் மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.அதனுடன்  உப்பு,மஞ்சள்தூள்,மிளகாய் தூள்,தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
இறக்கிய பின் எலுமிச்சை ஜூஸ் பிழியவும்.
இந்த பொடிமாசை சாதத்தோடு சற்று நல்லெண்ணைய் விட்டு  பிசைந்தும் சாப்பிடலாம். பொரியலாகவும் உபயோகித்துக்கொள்ளலாம்.
இதே முறையில் வாழைக்காயை செய்யலாம்

Monday, September 5, 2011

பலாப்பழ பாயசம்



தேவையானவை:

பலாச்சொளை        10
பொடித்த வெல்லம்    1 1/2 கப்
பால்                 1 கப்
முந்திரிபருப்பு         5
திராட்சை             5
நெய்                 1 மேசைக்கரண்டி
குங்குமப்பூ            1/2 தேக்கரண்டி
-------
செய்முறை:

பலாச்சொளைகளின் உள்ளே இருக்கும் கொட்டைகளை எடுத்துவிட்டு குக்கரில் வேகவைத்து விழுது போல் அரைத்துக்கொள்ளவேண்டும்.
அரைத்த விழுதினை பொடித்த வெல்லத்துடன் சேர்த்து அடுப்பில் வைத்து வெல்லம் கரையும் வரை நன்கு கிளறவேண்டும்.
பின்னர் பாலை விட்டு எல்லாம் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் இறக்கவேண்டும்.
ஏலக்காய் சேர்த்து நெய்யில் முந்திரி திராட்சை வறுத்து போடவேண்டும்.
கடைசியாக குங்குமப்பூவை சிறிது பாலில் கலந்து சேர்க்கவேண்டும்.

Sunday, August 28, 2011

கொழுக்கட்டை



  விநாயக சதூர்த்திக்கு தேங்காய்,உளுந்து ஆகிய இரண்டு வகை கொழுக்கட்டைகள் செய்வது வழக்கம்.
இதற்கு மேல்மாவு இரண்டிற்கும் ஒன்று.

மேல்மாவு செய்வதற்கு தேவையானவை:

அரிசி மாவு 2 கப்
(பச்சரிசி 3 கப்பை தண்ணீரில் இரண்டு மணிநேரம் ஊறவைத்து வடிகட்டி நிழலில் துணியை போட்டு உலர்த்தி எடுக்கவும்.
பின்னர் mixie ல் அரைத்து சலிக்கவும். )சலித்தமாவு 2 கப் இருக்கவேண்டும்.
தண்ணீர் 4 கப்
நல்லெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
உப்பு 1/2 டீஸ்பூன்

செய்முறை:
* அடுப்பில் ஒரு அகண்ட பாத்திரத்தை வைத்து அதில் 4 கப் தண்ணீர் விட்டு அதனுடன் எண்ணைய்,உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்தவுடன் சலித்துவைத்துள்ள அரிசிமாவை பரவலாக தூவிக்கொண்டே கிளறவேண்டும்.கட்டிதட்டாமல் நன்றாக கிளறி
ஒரு தட்டில் எடுத்து வைத்து அதன் மேல் ஈரத்துணியால் மூடவேண்டும்.இப்போழுது மேல்மாவு ரெடி.

தேங்காய் பூரணம் செய்வதற்கு தேவையானவை:

துருவிய தேங்காய் 1 கப்
துருவிய வெல்லம் 1 கப்
நல்லெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் பொடி 1 டீஸ்பூன்



செய்முறை:
1.அடுப்பில் வாணலியை வைத்து அதில் துருவிய தேங்காய்,வெல்லம் சேர்த்து கிளறவேண்டும்.
(தண்ணீர் விடக்கூடாது)ஈரப்பசை இல்லாமல் "பிசுக்" எனக்கையில் ஒட்டிக்கொள்ளும் பதத்தில் இறக்கி
ஏலக்காய் பொடியை தூவவேண்டும். தேங்காய் பூரணம் ரெடி.
2. ரெடியாக வைத்துள்ள மேல்மாவை நல்லெண்ணையை கையில் தடவிக்கொண்டு பிசைந்து உருண்டைகளாக
உருட்டிக்கொள்ளவும்.
3.ஒரு உருண்டையை கையில் எடுத்து கிண்ணம் போல் செய்து நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து மூடவும்.
பின்னர் இட்லி தட்டில் ஆவியில் வைத்து 7 நிமிடத்தில் எடுக்கவும்.

உளுத்தம்பூரணம் செய்வதற்கு தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1/2 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
கடலைப்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் 2
சிவப்பு மிளகாய் 2
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு




செய்முறை:

1.இரண்டு பருப்புகளையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி மற்றவைகளுடன் சேர்த்து நைசாக
அரைத்துக்கொள்ளவும்.
2.அரைத்த விழுதை இட்லி தட்டில் ஆவியில் வைத்து 10 நிமிடம் கழித்து எடுக்கவும்.
3.ஆவியில் வைத்ததை எடுத்து உதிர்த்துக்கொண்டு வாணலியில் தாளிக்கவேண்டியவைகளை தாளித்து
அதனுடன் சேர்த்து கிளறி எடுத்து வைக்கவும்.
4.ரெடியாக வைத்துள்ள மேல்மாவினை உருண்டைகளாக்கி ஒரு உருண்டையை உள்ளங்கையில் வைத்து
பட்டையாக தட்டி அதனுள் உளுந்து பூரணத்தை வைத்து சோமாசி போல் மூடவும்.
பின்னர் இட்லிதட்டில் 7 நிமிடம் வைத்து எடுக்கவும்.

Sunday, August 21, 2011

முள்ளங்கி பொரியல்


தேவையானவை:
முள்ளங்கி              10
மஞ்சள்தூள்        1 தேக்கரண்டி
தேங்காய் துருவல்  2 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை    1 மேசைக்கரண்டி
இஞ்சி             1 துண்டு
பச்சைமிளகாய்     2
உப்பு,எண்ணைய்    தேவையானது
------
கடுகு          1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை  1 கொத்து
-----
செய்முறை:

முள்ளங்கியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு microwave bowl ல் நறுக்கிய முள்ளங்கியை சிறிது தண்ணீரும்,மஞ்சள்தூளும் சேர்த்து "H" ல் நான்கு நிமிடம் வைக்கவும்.
வெளியே எடுத்து தேவையான உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி மீண்டும் நான்கு நிமிடம் வைக்கவும். வெந்துவிடும்.
வாணலியில் எண்ணைய் சேர்த்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த முள்ளங்கியை சேர்த்து பிரட்டவும்.
தேங்காய் துருவல் ,பொட்டுக்கடலை .இஞ்சி.பச்சைமிளகாய் நான்கையும் கரகரவென்று அரைத்து சேர்க்கவும்.
திடீரென்று விருந்தாளிகள் வந்தால் இந்த பொரியலை பதினைந்து  நிமிடத்தில் செய்து அசத்திவிடலாம்.

Monday, August 15, 2011

வெஜ் சைனீஸ் மஞ்சூரியன்






  • தேவையானவை:
  • பீன்ஸ் 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
  • முட்டைக்கோஸ் 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
  • குடமிளகாய் 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
  • காலிஃப்ளவர் 10 பூக்கள்
  • சிலரி சிறிதளவு
  • வெங்காயம் 1/2 கப் (நறுக்கியது)
  • spring onion 1/2 கப் (நறுக்கியது)
  • -------
  • பூண்டு 8 பல்
  • இஞ்சி 1 துண்டு
  • பச்சைமிளகாய் 4
  • சோயா sauce 2 மேசைகரண்டி
  • சில்லி பேஸ்ட் 2 மேசைக்கரண்டி
  • மிளகு தூள் 1 தேக்கரண்டி
  • கார்ன் மாவு 2 மேசைக்கரண்டி
  • vegetable stock 1/2 கப்
  • ------செய்முறை:மஞ்சூரியன் செய்யும் முறை:

  • காய்கறிகளை ஒரே அளவில் நறுக்கிகொள்ளவும்.
  • கடாயில் சிறிது தண்ணீர் வைத்து எல்லா காய்கறிகளையும் வேகவைக்கவும்.
  • ஒரு மஸ்லீன் துணியில் காய்கறிகளை வடிகட்டவும்.
  • வடிந்த தண்ணீரை veg.stock ஆக பயன்படுத்தலாம்.
  • -------
  • வாணலியில் எண்ணைய் வைத்து பூண்டு,இஞ்சி,பச்சைமிளகாய்,சோயா sauce,சில்லி
  • பேஸ்ட்,மிளகு தூள்,கார்ன் மாவு எல்லாவற்றிலும் பாதி அளவு எடுத்து இதில்
  • சேர்த்து நன்கு வதக்கவும்.காய்கறிகளையும் (வெங்காயம் தவிர்த்து) இதனுடன்
  • சேர்த்து வதக்கவும்.உப்பு சேர்க்கவும்.ஆறினவுடன் சிறு சிறு உருண்டைகளாக
  • உருட்டி எண்ணையில் பொறித்து எடுக்கவும்.

  • GRAVY செய்யும் முறை




  • கடாயில் எண்ணைய் வைத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மீதமுள்ள
  • பூண்டு,இஞ்சி,பச்சைமிளகாய்,மிளகு தூள்,சில்லி பேஸ்ட்,சோயா sauce சேர்த்து
  • வதக்கவும்.சிறிது உப்பு சேர்க்கவும்.
  • ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு மேசைக்கரண்டி கார்ன் மாவை ஒரு
  • கப் தண்ணீரில் கரைக்கவும்.சிறிது கொதிக்கவைக்கவும்.இந்த கரைசலை
  • கடாயில் உள்ள வெங்காயம்,பூண்டு மிக்சரில் சேர்க்கவும்.தயாராக உள்ள
  • பொறித்த மஞ்சூரியன் உருண்டைகளை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவைத்து
  • இறக்கவும்.
  • நூடுல்ஸ்,சாதம் இரண்டோடும் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.




Monday, August 8, 2011

அரைப்புளி குழம்பு


தேவையானவை:  
சேனைக்கிழங்கு  1/4 கிலோ
கொண்டக்கடலை 1 கப் (channa)
புளி ஒரு எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி 3 மேசைக்கரண்டி
தேங்காய் துண்டுகள் 1/4 கப்
அரிசிமாவு 1 டீஸ்பூன்
எண்ணைய், உப்பு தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
மிளகாய் வற்றல் 3
கறிவேப்பிலை 1 கொத்து
-----
செய்முறை:

சன்னாவை நான்கு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
சேனைக்கிழங்கை தோல் சீவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து அதில் ஒரு குழிக்கரண்டி நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,மிளகாய் வற்றல்,
 இவைகளுடன் கொண்டக்கடலையையும் போட்டு சிவக்க வறுக்கவும்.பின்னர் தேங்காய் துண்டங்களையும் போட்டு சற்று வறுத்து கறிவேப்பிலையை சேர்த்து
வெடிக்கவிடவும்.வெடித்ததும் சாம்பார் பொடி போட்டு வறுக்கவும்.
பின்னர் புளியை கெட்டியாக கரைத்து விட்டு உப்பு சேர்த்து நறுக்கிய சேனைக்கிழங்கு துண்டுகளை சேர்க்கவும்.
நன்றாக கொதித்து வற்றியவுடன் அரிசிமாவை சிறிது தண்ணீரில் கரைத்து விட்டு எல்லாம் சேர்ந்து கொதித்தபின் இறக்கவும்.
வேண்டுமென்றால் அப்பளத்தை சிறு துண்டுகளாக்கி பொரித்து போடலாம்.

Wednesday, August 3, 2011

நவரத்ன குருமா



.

தேவையானவை:
காரட் 1/4 கப்
பீன்ஸ் 1/4 கப்
உருளைக்கிழங்கு 1/4 கப்
பச்சைப் பட்டாணி 1/4கப்
 பனீர் துண்டுகள் 10
முந்திரி 5
வெங்காயம் 2

தக்காளி 2

மஞ்சள் தூள்,மிளகாய் பொடி,தனியா பொடி,garam masala
ஒவ்வொன்றும் ஒரு டீஸ்பூன்.
தேங்காய் பால் 1 கப்
தயிர் or cream 1/2 கப்

எண்ணைய்,உப்பு தேவையானது.



பொடி செய்ய:

சோம்பு 1 டீஸ்பூன்
தனியா 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
பட்டை சிறு துண்டு
ஏலக்காய் 2

Paste பண்ண:
பச்சை மிளகாய் 4
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 4

செய்முறை:

முதலில் பீன்ஸ்,காரட்,உருளைக்கிழங்கு மூன்றையும் பொடியாக நறுக்கி பச்சை பட்டாணியுடன் சேர்த்து வதக்கி நன்றாக வெந்தவுடன் தனியே எடுத்துவைக்கவும்.
பனீர் துண்டுகளை எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
பொடி செய்ய கொடுத்துள்ளவைகளை நன்றாக எண்ணையில் வறுத்து பொடி பண்ணவும்.
பச்சைமிளகாய்,இஞ்சி,பூண்டு மூன்றையும் விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணைய் விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.வெங்காயம் நன்றாக வெந்ததும் நறுக்கிய தக்காளியைப்போட்டு
வதக்கவும்.பொடிபண்ணிய பவுடரையும்,paste யும் போட்டு சிறிது வதங்கிய வுடன் மஞ்சள்தூள்,மிளகாய் தூள்,தன்யா பொடி மூன்றையும் சேர்க்கவும்.இந்த கலவையில்
வெந்த காய்கறிகளையும் சிறிது தண்ணீரும்,உப்பும் சேர்த்து நன்றாகக்கலந்து கொதிக்கவக்கவும்.
தேங்காய்பால்,தயிர் இரண்டையும் சேர்த்து ஒரு நிமிடம் வைத்து இறக்கவும்.அடுப்பை அணைக்கும் முன் பனீர் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும்.
கடைசியில்  வறுத்த முந்திரியை சேர்க்கவும்.


Thursday, July 28, 2011

ரவா பொங்கல்

தேவையானவை:

ரவா 1 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
---
பயத்தம்பருப்பு 1/4 கப்
இஞ்சி ஒரு சிறிய துண்டு
பச்சைமிளகாய் 2
மிளகு 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
முந்திரிபருப்பு 10
உப்பு,எண்ணைய் தேவையானது
---
செய்முறை:


பயத்தம்பருப்பை ஒரு கப் தண்ணீரில் மஞ்சள்தூள்,பெருங்காய்த்தூள் சேர்த்து வேகவைக்கவேண்டும். பருப்பு நன்கு குழைய வேண்டும்.குக்கரிலும் வைக்கலாம். 4 விசில் விடவேண்டும்.

ஒரு கடாயை எடுத்துக்கொண்டு ஒரு டேபிள்ஸ்பூன் நெய்,ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணைய் விட்டு முதலில் மிளகை பொறிக்கவேண்டும். பின்னர் சீரகத்தை பொறித்து அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும்.தயாராக உள்ள பயத்தம்பருப்பை இதனுடன் சேர்த்து கிளறவேண்டும்.

இன்னொரு அடுப்பில் இரண்டு கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்கவிடவேண்டும். தண்ணீர் கொதித்தவுடன் பயத்தம்பருப்பு கலவையுடன் உப்புடன் சேர்த்து கிளறவேண்டும்.
ரவையை பரவலாக கட்டித் தட்டாமல் தூவிக்கொண்டே கிளறவேண்டும்,பயத்தம்பருப்பும் ரவையும் நன்றாக சேர்ந்து வந்தபின் அடுப்பை அணைத்து வறுத்த முந்திரியை போடவேண்டும்.

ரவா பொங்கலுக்கு பொருத்தமான side dish தேங்காய் சட்னி.

Friday, July 22, 2011

தேங்காய் பால் குருமா

தேவையானவை:

தேங்காய் பால் 2 கப்
உருளைக்கிழங்கு 2
சின்ன வெங்காயம் 10
காரட் 2
தக்காளி 2
தண்ணீர் 1/4 கப்

அரைக்க:

தேங்காய் துருவியது 2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை 1/4 கப்
முந்திரிபருப்பு 10
பச்சைமிளகாய் 2
கசகசா 1 டீஸ்பூன்

தாளிக்க:

பட்டை,லவங்கம்,சோம்பு எல்லாம் சிறிதளவு.

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்துக்கொள்ளவும்.
காரட்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கக்ிகொள்ளவும்.
அரைக்கக்கொடுத்துள்ள பொருட்களை விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டிய பொருட்களை வறுக்கவும்.
பின்னர் சின்ன வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
அதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு,காரட்,தக்காளி,தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
அரைத்த விழுதுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

இந்த குருமா இட்லி,தோசை,சப்பாத்தி ஆகியவற்றிற்கு சிறந்த side

Sunday, July 10, 2011

ஒக்காரை

தேவையானவை:

பயத்தம்பருப்பு 1 கப்

வெல்லம் (பொடித்தது) 1 1/2 கப்

தேங்காய் துருவல் 1/2 கப்

நெய் 1/4 கப்

ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்

முந்திரி பருப்பு 10

செய்முறை:

பயத்தம்பருப்பை ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி நைசாக அரைக்கவேண்டும்.

அரைத்த விழுதை இட்லி தட்டில் ஆவியில் 15 நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.

நன்றாக ஆறிய பின் மிக்சியில் பொடிக்கவேண்டும்.

வெல்லத்தை சிறிது தண்ணீர் வைத்து கரைந்ததும் வடிகட்டி அடுப்பில் வைத்து கம்பிப்பதம் வந்ததும்

பொடித்து வைத்துள்ள பயத்தம்பருப்பு தூள்,தேங்காய் துருவல் இரண்டையும் தூவி நன்கு கிளறவேண்டும்.

பின்னர் நெய் ஊற்றி கிளற உதிரியாக வரும்.

முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவேண்டும்.

Monday, July 4, 2011

அவரைக்காய் பொரியல்

தேவையானவை: அவரைக்காய் 1/4 கிலோ
தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் 2
பொட்டுக்கடலை 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:


அவரைக்காயின் நாரை அகற்றிவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு microwave bowl ல் நறுக்கியதை போட்டு தேவையான உப்பும்,சிறிது தண்ணீரும் சேர்த்து "H" ல் ஐந்து நிமிடம்
வைத்தால் போதும் வெந்துவிடும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த
அவரைத்துண்டுகளை சேர்த்து வதக்கவேண்டும்.
தேங்காய் துருவல்,பச்சைமிளகாய்,பொட்டுக்கடலை மூன்றையும் தண்ணீர் விடாமல் பொடி பண்ணி இதனுடன்
சேர்த்து ஒரு பிரட்டு பிரட்ட வேண்டும்.

Monday, June 27, 2011

கார்ன் ரவா உப்புமா



தேவையானவை:


கார்ன் ரவை 1 கப்

முழு பாசிப்பயறு 1 கப்

வெங்காயம் 1

தக்காளி 2

பூண்டு 3 பல்

பச்சைமிளகாய் 2

இஞ்சி 1 துண்டு

மிளகு தூள் 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணய் தேவையானது

கொத்தமல்லித்தழை சிறிதளவு
-----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:



கார்ன் ரவை கடைகளில் கிடைக்கும்.

முழு பாசிப்பயறை தண்ணீரில் 8 மணிநேரம் ஊறவைத்து வடிகட்டி ஒரு ஈரத்துணியில் சுற்றி வைக்கவேண்டும்

அடுத்தநாள் முளை கட்டிவிடும்.முளைகட்டாவிட்டால் மீண்டும் பயறை தண்ணீரில் அலசி விட்டு ஈரத்துணியில் சுற்றி

வைத்தால் இரண்டாம் நாள் முளைகட்டிவிடும்.பின்னர் அதை இட்லி தட்டில் ஆவியில் வைத்து எடுக்கவேண்டும்.(4 நிமிடம்).

கார்ன் ரவையை தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.

வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவேண்டும்.
--------
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணைய் சேர்த்து தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளிக்கவேண்டும்.
பின்னர் வெங்காயம்,தக்காளி,பூண்டு,இஞ்சி,பச்சைமிளகாய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி தேவையான தண்ணீர் சேர்க்கவேண்டும்.
(ஒரு கப் ரவைக்கு 2 கப் தண்ணீர் வீதம்).
தண்ணீர் கொதித்தவுடன் ஆவியில் வேகவைத்த முழு பாசிப் பயறு,ஊறவைத்த கார்ன் ரவை, தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து
நன்கு கிளறவேண்டும்.
கடைசியில் மிளகு தூள் தூவி கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...