Sunday, October 12, 2014

சிறுதானியங்கள் (Millets)உண்ண வேண்டியது ஏன்?




"உணவே மருந்து" என்பார்கள் நமது முன்னோர்கள்.அதற்கு அவர்கள் உணவில் இருந்த ஊட்டச்சத்துக்களே காரணம்.

ஆனால், வளரும் இளைஞர்களோ இன்று மருந்தையே உணவாக உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள்.இதற்கு முக்கியக் காரணங்களாக இருப்பவை, உடல் உழைப்புக் குறைவு, மாறி வரும் உணவுப் பழக்கம்."ஃபாஸ்ட் ஃபுட்" கலாச்சாரம் தான்.இவை  அனைத்தும் நோய்களுக்கும் ஆதாரமாய் மாறி வருகிறது.

சிறுதானியங்களைச் சமைத்துச் சாப்பிடுபவர்கள் இன்றும் கிராமங்களில் இருக்கின்றனர்.அவர்களிடம் நீரிழிவு,உடல் பருமன், இதய நோய் போன்ற உபாதைகள் இல்லை.

அரிசி, கோதுமையைத் தவிர்த்து  சிறு தானியங்கள் என்றால் நமக்கு உடன் ஞாபகத்திற்கு வருவது கேழ்வரகுதான்.ஆனால், அதைத் தாண்டி, சாமை,வரகு,குதிரைவாலி,தினை, கம்பு ஆகியவையும் சிறுதானிய வகையைச் சேர்ந்தன ஆகும்.

நம்மில் பலருக்கு சிறுதானியங்களை சமைப்பது எப்படி? அதனால் என்னென்ன சமைக்கலாம்? என்றெல்லாம் தெரியவில்லை.ஆனால்...அரிசியிலும், கோதுமையிலும் செய்யப்படும் அனைத்து உணவுகளையும் சிறுதானியங்களிலும் சமைக்கலாம்.

உதாரணத்திற்கு, சாமை தயிர் சாதம்,குதிரைவாலி பொங்கல் முதலியன.சிறுதானியங்களை சமைக்கையில் கவனத்தில் நாம் கொள்ள வேண்டியவை...அவை அளவிலும் சிறிதாக இருப்பதால் தேவையான தண்ணீர்,வேகவிடும் நேரம்,பக்குவம் ஆகியவை தெரிய வேண்டும்.ஆனால் நாளாவட்டத்தில் இந்த பக்குவம் நமக்குத் தெரிந்துவிடும்.

இந்த சிறுதானியங்களில், இரும்பு,மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் போன்றவை உள்ளன.இத்தானிய உணவு வகைகள் குளுக்கோசை சிறிது சிறிதாக நீண்ட நேரத்திற்கு வெளியிடுவதால் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது."குளூட்டன்" இத்தானியங்களில் அறவே இல்லை.

அரிசி,கோதுமை போன்ற உணவை உண்ணுகையில் உண்டாகும் அசிடிட்டி, உடல் பருமன், புற்றுநோய் ஆகியவை சிறுதானியங்கள் உண்ணும்போது ஏற்படுவதில்லை.

ராகி, கம்பு  போன்ற தானியங்கள் ட்ரைகிளிசிரைட் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.உணவின் செரிமானமும் எளிதில் நடைபெறுகிறது.

இனி ஒவ்வொரு சிறுதானியங்களின் சிறப்பைக் காணலாம்..

சிறுதானியங்களில் அதிக சக்தி மிகுந்தது கேழ்வரகு (Ragi,finger millet).இதில் புரதம்,தாது உப்பு,சுண்ணாம்பு சத்து, இரும்புச் சத்து உள்ளது.இதை உண்ணுவதால் உடல்வலிமை அதிகரிக்கும்.சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

சாமை (little millet), மலச்சிக்கலைப் போக்கும், ஆண்மை குறைபாடை நீக்கும்

கம்பு,( pearl millet) ஆரோக்கியமான தோலுக்குச் சிறந்தது.கண்பார்வைக்கு முக்கியமான வைட்டமின் ஏ உருவாக முக்கியக் காரணியான பீட்டாகரோட்டின் உள்ளது.நல்ல கொழுப்பு இதில் 70 சதவிகிதம் உள்ளது.

வரகில் (kodo millet), புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது.இது உடல் எடையைக் குறைக்கும்.பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.வரகைக் கோயில் கும்பத்தில் வைப்பார்கள்.ஏனெனில் அதற்கு இடியையும் தாங்கும் சத்து உள்ளதால் தான்.வரகு, சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.மூட்டுவலியை நீக்குகிறது.கல்லீரல் செயல்பாடுகளைத் தூண்டி..கண், நரம்பு நோய்களைத் தாக்கும் குணம் கொண்டது இத் தானியம்.

குதிரைவாலியில் (banyard millet) நார்ச்சத்து அதிகம்.நம் அன்றாடத் தேவைக்கான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.முக்கியமாக எலும்புக்கு வலு சேர்க்கும் தானியம் இது.கனிமச்சத்தும், பாஸ்பரசும் நம் உடலுக்கு அவசியமான சத்து.இது சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்து எலும்பு ,பல் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் பாஸ்பேட்டாக மாற்றுகிறது.

தினை (foxtail millet) சத்துமிக்கது.இதயத்தை வலிமைப் படுத்துவதில் இத்தானியம் முதலிடம் வகிக்கிறது.

ஆகவே நண்பர்களே! மருந்து வாங்கச் செலவிடும் பணத்தில் சிறுதானியங்களை வாங்கிச் சமைத்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்களும் வளமாக வாழ்வதுடன்..உங்களது அடுத்தத் தலைமுறையையும் ஆரோக்கியத்துடன் உருவாக்குங்கள்.

No comments:

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...