Sunday, March 29, 2009

சேமியா புலாவ்


தேவையானவை:

சேமியா 2 கப்
வெங்காயம் 2
பச்சைமிளகாய் 2
தக்காளி 3
பீன்ஸ் 15
காரட் 3
பச்சை பட்டாணி 1/2 கப்
-----
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
---
தாளிக்க:
பட்டை,லவங்கம்,பிரிஞ்சி இலை .
----
எண்ணைய்,உப்பு தேவையான அளவு

செய்முறை:

வெறும் வாணலியில் சேமியாவை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்
வெங்காயம்,பீன்ஸ்,பச்சைமிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி சிறிது எண்ணையில் நன்றாக பேஸ்டு மாதிரி வதக்கிக்கொள்ளவும்.
காரட்டை துருவிக்கொள்ளவும்.

கடாயில் சிறிது எண்ணய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் பச்சைமிளகாய்,துருவிய காரட்,பீன்ஸ்,பச்சைபட்டாணி ஆகியவற்றை சேர்க்கவும் காய்கறிகள்நன்றாக வதங்கியவுடன் தக்காளி பேஸ்டு
சேர்க்கவும்.தேவையான அளவு உப்புடன்,இஞ்சிபூண்டு விழுது,மஞ்சள் தூள்,தனியா தூள்,மிளகாய் தூள் சேர்த்து 4 கப் தண்ணீர் விடவும்.
தண்ணீர் கொதித்தவுடன் வறுத்த சேமியாவை சேர்த்துக் கிளறவும்.
பொல பொல வென்று வந்ததும் இறக்கவும்.

Thursday, March 26, 2009

அஞ்சறைப்பெட்டி

1.கடுகு:

கடுகு தாளிக்காத சமையல் ருசியுடன் இருக்காது.

விடாமல் விக்கல் வந்தால்,சிறிது கடுகினை எடுத்து அரை கப் வென்னீரில் ஊறவைத்து காய்ச்சவேண்டும்.அதை வடிகட்டி தேன் இரண்டுஸ்பூன் கலந்து அருந்தினால் விக்கல் நின்றுவிடும்.

2.பெருங்காயம்:

வாயுத்தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு கைகண்ட மருந்து.ஒரு கப் மோரில் சிறிது பெருங்காயத்தூளைக் கலந்து சாப்பிட சிறிது நேரத்தில் ஏப்பம் வரும்.காற்று வெளியேறி சரியாகிவிடும்.
கைக்குழந்தைகள் வயிற்று வலியால் அவதிபட்டால் துளி பெருங்காயத்தை உரசி வயிற்றில் தடவினால் குணமாகும்.
இளம் தாய்க்கு பெருங்காயம் ஒரு அருமையான மருந்து.தினம் சாப்பிட்டவுடன் சிட்டிகை பெருங்காயப்பொடியை தேனில் குழைத்து வெற்றிலையில் மடித்து சாப்பிட்டால் கருப்பையில் உள்ள கசடுகள் வெளியேறும்.

3.கசகசா:

தேங்காய்க்கு பதிலாக சமையலில் உபயோகப்படுத்தலாம்.
தூக்கமே வராமல் அவதிப்படுபவர்கள் கசகசாவை பாலில் ஊறவைத்து விழுதாய் அரைத்து அதை மறுபடி ஒரு கப் பாலில் பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிட நன்றாக தூக்கம் வரும்.
மாதக்கணக்கில் சாப்பிிடக்கூடாது. உடல் பருமனாகிவிடும்.

மார்பு சளிக்கு கசகசாவை இரண்டு கப் தண்ணீரில் நன்றாக கொதிக்கவிட்டு வடிகட்டி கொடுத்தால் சளி அகலும்.

பொலிவான முகம் வேண்டுமா.கசகசாவை பாலில் ஊறவைத்து பேஸ்ட் போல அரைத்து முகம்,கைகளில் தடவி 15 நிமிடம் ஊறியபின் கழுவவேண்டும்..

Saturday, March 21, 2009

தவலை அடை



தேவையானவை:
பச்சரிசி 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
துவரம்பருப்பு 1/2 கப்
உளுத்தம்பருப்பு 1/2 கப்
பயத்தம்பருப்பு 1/4 கப்

சிவப்பு மிளகாய் 5
பச்சை மிளகாய் 5
இஞ்சி ஒரு துண்டு
தேங்காய் ஒரு பெரிய துண்டு
பெருங்காயத்தூள் ஒரு டீஸ்பூன்
கொத்தம்மல்லித்தழை சிறிதளவு
கறிவேப்பிலை ஒரு கொத்து
கடுகு 1 டீஸ்பூன்
எண்ணைய்,உப்பு தேவையானது.

செய்முறை:

1.பச்சரிசி,துவரம்பருப்பு,கடலைபருப்பு மூன்றையும் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.சிவப்பு மிளகாய்,உப்பு,பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
2.உளுத்தம்பருப்பு,பயத்தம்பருப்பு இரண்டையும் தனித்தனியாக ஊறவைக்கவும்.
உளுத்தம்பருப்பை இட்லிக்கு அரைப்பதுபோல் அரைக்கவும்.பயத்தம்பருப்பை வடிகட்டவும்.
3.தேங்காய்,பச்சைமிளகாய்,இஞ்சி மூன்றையும் பொடிப்பொடியாக நறுக்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு மேலே குறிப்பிட்ட மூன்றையும் சேர்த்து கலக்கவும்.
ஒரு கடாயில் எண்ணைய் வைத்து கடுகை போட்டு வெடிக்கவிட்டு அதில் சேர்க்கவும்.
கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கி போடவும்.
தோசைக்கல்லை அடுப்பில்வைத்து கலந்த அடை மாவை சற்று கனமாக ஊற்றி நடுவில் இரண்டு ஓட்டை போட்டு எண்ணைய் விடவும்.
நன்றாக வெந்ததும் அடுப்பை ஸ்லிம்மில் வைத்து பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.
தக்காளி சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Wednesday, March 11, 2009

வெல்ல அடை,உப்புஅடை (காரடையான் நோன்பு )


பங்குனி மாதம் முதல்தேதி (14.3.2009) அன்று காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.அன்று வெல்ல அடை,உப்புஅடை என்று இருவகை அடைகள் செய்வது வழக்கம்.
----

முதலில் பச்சரிசி அரைகிலோவை அரைமணிநேரம் ஊறவைத்து களைந்து வடித்து காயவைத்து நைசாக அரைத்து சலித்துக்கொள்ளவும்.வாசனை வரும்வரை வறுக்கவும்.
--

வெல்ல அடை:
தேவையானவை:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/2 கப்
தேங்காய் சிறிய பற்களாக கீரியது அரை கப்
வெல்லம் (பொடித்தது) 1 கப்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
தண்ணீர் 2 கப்

செய்முறை:

காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும்.
வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் "தள தள' என்று கொதிக்கும்போது காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.
வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.
மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து வடைபோல் தட்டி
இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.

உப்பு அடை:
தேவையானவை:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/2 கப்
தேங்காய் துண்டுகள் 1/2 கப்
தண்ணீர் 2 கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:
காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் இரண்டு கப் தண்ணீரை உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் வெந்த காராமணி,தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்த மாவை
தூவிக்கொண்டே கிளறவும்.
மாவு நன்றாக வெந்ததும் வடைபோல தட்டி இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.

Tuesday, March 3, 2009

பாகற்காய் பிட்லை

தேவையானவை:

மிதி பாகற்காய் 200 gm
கொண்டைக்கடலை 1/2 கப் (channa)
துவரம்பருப்பு 1 கப்
புளி எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
----
அரைக்க:

தனியா 2 டேபிள்ஸ்பூன்
கடலைபருப்பு 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 10
உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
பெருங்காயம் சிறிதளவு
---
தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு,மிளகாய்வற்றல்,கறிவேப்பிலை
-----

செய்முறை:

1.துவரம்பருப்பை மஞ்சள்பொடி சேர்த்து குக்கரில் வேகவைக்கவும்.
2.மிதி பாகற்காயை காம்பை எடுத்துவிட்டு குறுக்காக வெட்டவும்.
3.கொண்டக்கடலையை முந்தினநாள் இரவே ஊறவைக்கவும்.
4.அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணய் விட்டு வறுத்து நைசாக இல்லாமல் அரைத்துக்கொள்ளவும்.
----
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு எண்ணைவிட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
பின்னர் குறுக்காக வெட்டிய பாகற்காய்,ஊறவைத்த கொண்டக்கடலை இரண்டையும் சேர்த்து வதக்கவும்.
மிதி பாகற்காய் நன்றாக வெந்ததும் வேகவைத்த துவரம்பருப்பு,அரைத்த விழுது,உப்பு மூன்றையும் சேர்த்து கொதிக்க வைக்கவும்
புளியை கரைத்துவிடவும். நன்றாக கொதிவந்ததும் இறக்கவும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...